Published : 07 Sep 2021 05:50 PM
Last Updated : 07 Sep 2021 05:50 PM

சுவேந்து அதிகாரி ஒரு முறை தோற்கடித்தார்;  மம்தா பானர்ஜியை வேறு ஒருவர் வீழ்த்துவார்: திலிப் கோஷ் நம்பிக்கை

கொல்கத்தா

சுவேந்து அதிகாரி மம்தா பானர்ஜியை ஒரு முறை தோற்கடித்தார், பவானிபூரில் பாஜக சார்பில் வேறு ஒருவர் மம்தா பானர்ஜியை வரும் தேர்தலில் தோற்கடிப்பார் என மேற்குவங்க மாநில பாஜக தலைவர் திலிப் கோஷ் கூறினார்.

மேற்குவங்க சட்டப் பேரவைத் தேர்தலில் ம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் மகத்தான வெற்றியைப் பதிவு செய்தது. மொத்தமுள்ள 294 இடங்களில் 213 தொகுதிகளை அக்கட்சி கைபற்றியது. தீவிர பிரச்சாரம் செய்த போதிலும் பாஜக தேர்தலில் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. 77 இடங்களுடன் இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது.

மேற்கு வங்க சட்டப் பேரவைத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் மம்தா தோல்வி அடைந்தார். அவரது முன்னாள் சகாவான சுவேந்து அதிகாரி, பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். எனினும் மேற்குவங்க முதல்வராக மம்தா பானர்ஜி பதவியேற்றார். அவர் அடுத்த 6 மாதங்களுக்குள் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட வேண்டும்.

அவர் மேற்குவங்க மாநிலத்தில் உள்ள பவானிபூர் தொகுதியில் போட்டியிடக்கூடும் என தகவல்கள் வெளியாகி இருந்தது. அங்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முதல்வர் மம்தா பானர்ஜி திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இங்கு வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் மம்தா பானர்ஜி உள்ள நிலையில் அவரை தோற்கடிக்க பாஜக வியூகம் வகுத்து வருகிறது. இதுகுறித்து மேற்குவங்க மாநில பாஜக தலைவர் திலிப் கோஷ் கூறியதாவது:

நாங்கள் பவானிபூர் தொகுதியில் போட்டியிட தயாராக இருக்கிறோம். வெற்றி பெற போராடுவோம்.பவானிபூர் தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் மற்றும் தேர்தல் நடைபெறும் மற்ற இரு தொகுதிகளில் வேட்பாளர் குறித்து ஏற்கெனவே ஆலோசனை நடைபெற்றுள்ளது.

வேட்பாளர் குறித்து பாஜக ஆட்சி மன்றக்குழு முடிவு செய்து வெளியிடும். சுவேந்து அதிகாரி மம்தா பானர்ஜியை ஒரு முறை தோற்கடித்தார். இப்போது பவானிபூரில் பாஜக சார்பில் வேறு ஒருவர் மம்தா பானர்ஜியை தோற்கடிப்பார்.

இடைத்தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு மேற்குவங்க அரசு அதிகாரத்தை கையில் எடுத்து செயல்படுகிறது. இந்த பிரச்சனையை இன்று தேர்தல் ஆணையத்திடம் புகாராக தெரிவித்துள்ளோம்.

சுவேந்து அதிகாரி திரிணமூல் காங்கிரஸில் இருந்தபோது அவர் மீது எந்த வழக்கும் இல்லை. அவர் பாஜகவில் இணைந்த பிறகு வழக்கு பதிவு செய்துள்ளனர். அவரை கைது செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது. நீதிமன்றம் அவருக்கு இடைக்கால பாதுகாப்பை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x