Last Updated : 07 Sep, 2021 11:14 AM

16  

Published : 07 Sep 2021 11:14 AM
Last Updated : 07 Sep 2021 11:14 AM

இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எந்த அச்சமும் இல்லை; ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் இந்துதான்: மோகன் பாகவத் பேச்சு

ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் | கோப்புப் படம்.

மும்பை

இந்தியாவில் உள்ள இந்துக்களும், முஸ்லிம்களும் ஒரே மூதாதையர்கள்தான், ஒவ்வொரு இந்தியரும் இந்துதான். இந்தியாவில் இருப்பதில் முஸ்லிம்களுக்கு எந்த பயமும் இல்லை என ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்தார்.

புனேவில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் நேற்று பங்கேற்றார்.

அப்போது அவர் பேசியதாவது:

''முஸ்லிம் தலைவர்கள் அனைவரும் அடிப்படைவாதத்துக்கு எதிராக, வலிமையாக ஒன்றுதிரள வேண்டும். இந்தியாவில் உள்ள சிறுபான்மையினருக்கு எந்தவிதமான அச்சமும் இல்லை. இந்துக்கள் எந்த சமூகத்தின் மீதும் விரோத மனப்பான்மையுடனும் இல்லை.

இந்து என்ற வார்த்தை தாய் மண்ணுக்கும், மூதாதையர்களுக்கும், இந்தியக் கலாச்சாரத்துக்கும் சமமானது. எங்களைப் பொறுத்தவரை ஒவ்வொரு இந்தியரும் இந்துதான். அவர்கள் மத்ததால், மொழியால், இனத்தால் வேறுபட்டாலும் அவர்கள் இந்துதான்.

இந்துக்களும், முஸ்லிம்களும் ஒரே மூதாதையர்களைக் கொண்டவர்கள்தான். அண்டை நாடுகளில் இருந்து படையெடுத்து வந்தவர்கள் மூலம்தான் இஸ்லாம் இந்தியாவுக்குள் வந்தது. இதுதான் வரலாறு.

தேவையில்லாத சர்ச்சைகளை எதிர்ப்பதோடு, அடிப்படைவாதத்துக்கும் எதிராக முஸ்லிம் தலைவர்கள் ஒன்றாக நிற்க வேண்டும். இதை விரைவாகச் செய்தால், நமது சமுதாயத்துக்குக் குறைவான சேதாரமே ஏற்படும்.

இந்திய தேசம் சூப்பர் பவர் கொண்டது. யாரையும் அச்சுறுத்தாது. இந்தியா அனைத்துத் துறைகளிலும் சிறந்த வளர்ச்சி பெற அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து உழைக்க வேண்டும்.

இந்து என்ற வார்த்தை எந்த இனத்தையும், மதத்தையும், மொழி அடையாளத்தையும் குறிக்காது. உயர்ந்த பாரம்பரியத்துக்கு வழங்கப்பட்ட பெயர்தான் இந்து. இது வாழுகின்ற ஒவ்வொருவரையும் உயர்த்துவதாகும். எங்களைப் பொறுத்தவரை ஒவ்வொரு இந்தியரும் இந்துதான்.

அனைத்து மாறுபட்ட கருத்துகளையும் ஏற்றுக்கொள்ளும் நமது கலாச்சாரத்திற்கு ஏற்ப, மற்ற மதங்களுக்கு அவமதிப்பு ஏற்படாது என்று நாங்கள் உறுதியளிக்கிறோம். மற்றவர்களின் கருத்துகளுக்கு அவமரியாதை செலுத்துவது அல்ல.

இந்தியாவில் உள்ள யாரைப் பற்றியும் முஸ்லிம்களுக்கு பயமில்லை. இந்துக்களும் யார் மீதும் விரோதப் போக்கோடு இல்லை. அனைவரின் வளர்ச்சிக்காகவும், நலனுக்காகவும் இந்தியர்கள் இருக்கிறார்கள்.

இந்தியாவைப் பிரிக்க விரும்பும் சிலர்தான் நாங்கள் ஒன்று அல்ல, நாங்கள் தனியானவர்கள் எனப் பேசுகிறார்கள். அதற்கு யாரும் இரையாகிவிடக் கூடாது. நாம் தொடர்ந்து ஒரே தேசமாக ஒற்றுமையாக இருப்போம். இதைத்தான் நாங்கள் ஆர்எஸ்எஸ்ஸில் நினைக்கிறோம். இதை உங்களுக்குத் தெரிவிக்க நான் இங்கு வந்தேன்''.

இவ்வாறு மோகன் பாகவத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x