Last Updated : 06 Sep, 2021 10:52 AM

 

Published : 06 Sep 2021 10:52 AM
Last Updated : 06 Sep 2021 10:52 AM

மே.வங்க இடைத் தேர்தல்: பவானிபூர் வேட்பாளராக மம்தா பானர்ஜி அதிகாரபூர்வ அறிவிப்பு

மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி | கோப்புப்படம்

கொல்கத்தா

மேற்கு வங்க மாநிலத்தில் பவானிபூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் பவானிபூர், ஜாங்கிபூர், சாம்செர்காஞ்ச் ஆகிய 3 தொகுதிகளுக்கு வரும் 30-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை திரிணமூல் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

கடந்த மே மாதம் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி, பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் தோல்வி அடைந்தார். ஆனால், அந்தத் தோல்வியை ஏற்காத மம்தா பானர்ஜி, நீதிமன்றத்தில் சுவேந்து அதிகாரி வெற்றியை எதிர்த்து வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில் இடைத் தேர்தல் நடக்கும் 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை திரிணமூல் காங்கிரஸ் கட்சி அதிகாரபூர்வமாக நேற்று அறிவித்துள்ளது. இதன்படி, “பவானிபூர் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜியும், ஜாங்கிபூர் தொகுதியில் ஜாகீர் ஹூசைனும், சாம்செர்காஞ்ச் தொகுதியில் அமிருல் இஸ்லாமும் போட்டியிடுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் பவானிபூர் தொகுதியில் மம்தா பானர்ஜி தொடர்ந்து போட்டியிட்டு வென்றுள்ளார். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில்தான் நந்திகிராமில் மம்தா போட்டியிட்டார். பவானிபூரில் மம்தா பானர்ஜி போட்டியிடுவதற்காக வேளாண் அமைச்சரும், இந்தத் தொகுதி எம்எல்ஏவாகவும் இருந்த சுபன்தீப் சந்தோபத்யாயே தனது பதவியைக் கடந்த மே மாதம் ராஜினாமா செய்துள்ளார்.

இந்த முறை பவானிபூரில் போட்டியிடும்பட்சத்தில் மம்தாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும். இந்த 3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் இம்மாதம் 30-ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 3-ம் தேதியும் நடக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x