Published : 06 Sep 2021 09:50 AM
Last Updated : 06 Sep 2021 09:50 AM
மத்தியப் பிரதேச மாநிலத்தில் மருத்துவப் படிப்பு முதலாமாண்டு மாணவர்களுக்கு ஆர்எஸ்எஸ் நிறுவனர் கேபி ஹெக்டேவார், பாரதிய ஜன சங் தலைவர் தீனதயால் உபாத்யாயா, விவேகானந்தர், டாக்டர் அம்பேத்கர் ஆகியோர் பற்றி பவுண்டேஷன் கோர்ஸ் நடத்தப்பட உள்ளது.
ஆனால், மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு இதுபோன்ற பாடங்கள் தேவையில்லை, இந்துத்துவா சிந்தனைகளை பாஜக புகுத்துகிறது என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டுகிறது.
இது குறித்து மத்தியப்பிரதேச கல்வித்துறை அமைச்சர் விஸ்வாஸ் சாரங் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
மருத்துவம் பயிலும் மாணவர்கள் சமூகம் மற்றும் மருத்துவ ரீதியான ஒழுக்க நெறிகளை கற்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. நம்முடைய தேசத்துக்கு சுதந்திரம் பெற்றுக் கொடுத்தவர்களின் வரலாற்றை மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ஹெக்டேவார், உபாத்யாயே, ஆயுர்வேத மருத்துவத்தின் பங்களிப்பாளர் மகரிஷி சார்க்கா, சுஷ்ருத் ஆகியோர் பற்றியும் அறிய வேண்டும்.
ஆதலால், முதலாமாண்டு எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு ஹெக்டேவர், உபாத்யாயே, விவேகானந்தர், அம்பேத்கர் உள்ளிட்ட சிறந்த ஆளுமைகள் குறித்து அடிப்படை கல்வி கற்பிக்கப்படும். அவர்களின் கொள்கைகள், மதிப்புகள், சமூக, மருத்துவ கடமைகள் குறித்தும் கற்பிக்கப்படும். இந்த பாடப்பிரிவு அடுத்த கல்வியாண்டு முதல் தொடங்கப்படும்” எனத் தெரிவித்தார்
மத்தியப் பிரதேச அரசின் இந்த முடிவுக்கு காங்கிஸ் கட்சி எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ பாஜக தனது சித்தாந்தங்களையும், திட்டங்களையும் மாணவர்களிடம் கல்வி மற்றும் பிற பிரிவுகள் மூலம் திணிக்கிறது.
இப்போது ஆர்எஸ்எஸ் அமைப்பினர், ஜன சங் தலைவர்கள் குறித்து எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு கற்றுத்தர திட்டமிட்டுள்ளது. ஹெக்டேவாரும், உபாத்யாயாவும் சுதந்திரப் போராட்டத்தில் என்ன மாதிரியான பணிகளைச் செய்துள்ளார்கள் என்பதை பாஜக அரசு விளக்க வேண்டும். எதற்காக அவர்களைப் பற்றி மருத்துவ மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதற்கு பதில் அளித்து மாநில பாஜக தலைவர் வி.டி.சர்மா கூறுகையில் “ இந்த நாட்டுக்காக ஹெக்டேவார் உழைத்துள்ளார் என்பதை பெருமையுடன் கூறுவேன், ஆர்எஸ்எஸ் அமைப்பை நிறுவி இந்த தேசத்துக்கு மட்டுமல்ல உலகிற்கே பல சிந்தனைகளை வழங்கியுள்ளார்.
அவரைப் பற்றி ஏன் எந்த தகவலும் மக்கள் தெரிந்து கொள்ளக் கூடாது. தேசத்துக்கு உழைத்தவர்கள் குறித்து அனைத்து பிரிவினரும் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த மிகப்பெரிய மனிதர்கள் தேசத்துக்கு என்ன செய்தார்கள் என்பதை மருத்துவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். தேசத்தைப் பற்றியும், சமூகத்தைப் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும்” எனத் தெரிவி்த்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT