Published : 05 Sep 2021 02:09 PM
Last Updated : 05 Sep 2021 02:09 PM
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசியல் முதிர்ச்சியோடு செயல்படுகிறார். ஆனால், மத்திய அரசு நேருவையும் அவரின் சாதனைகளையும் ஏன் வெறுக்கிறது என்று சிவசேனா கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத் கேள்வி எழுப்பியுள்ளார்.
75-வது சுதந்திர தின விழாக் கொண்டாட்டத்தின்போது, மத்திய கல்வித்துறை அமைச்சகம் வெளியிட்ட பதாகையில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் புகைப்படம் இல்லாமல் இருந்தது. இது தொடர்பாக சிவசேனா எம்.பி.யும், கட்சியின் தலைமைச் செய்தித் தொடர்பாளருமான சஞ்சய் ராவத் கருத்து தெரிவித்துள்ளார்.
சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளேடானா சாம்னாவில் சஞ்சய் ராவத் எழுதிய கட்டுரையில் கூறப்பட்டிருப்பதாவது:
''மத்திய கல்வித்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஹெச்ஆர்) அமைப்பு, சமீபத்தில் நடந்த சுதந்திர தின நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு, அபுல் கலாம் ஆசாத் ஆகியோரின் புகைப்படங்கள் இல்லாமல் பதாகை வெளியிட்டது. இது மத்திய அரசின் குறுகிய புத்தியையும், பழிவாங்கும் செயலையும் குறிக்கிறது.
வரலாற்றை உருவாக்கியதிலும், சுதந்திரப் போராட்டத்திலும் எந்தப் பங்களிப்பும் இல்லாதவர்கள் சுதந்திரப் போராட்டத்தின் ஹீரோக்களில் ஒருவரான நேருவின் படத்தை ஒதுக்கி வைத்துள்ளார்கள். இது நல்ல, ஆரோக்கியமான செயல் அல்ல, குறுகிய நோக்கமாகும். ஒவ்வொரு சுதந்திரப் போராட்ட வீரரையும் அவமானப்படுத்துவதாகும்.
சுதந்திரத்துக்குப் பின் நேருவின் கொள்கைகளில் யாருக்கும் எந்த வேறுபாடும் இல்லை. ஆனால், அவரின் சுதந்திரப் போராட்டப் பங்களிப்பை யாரும் மறுக்கவில்லையே?
இந்த அளவு ஜவஹர்லால் நேருவை வெறுப்பதற்கு அவர் என்ன செய்தார்? இன்று பொருளாதாரத்தை நகர்த்துவதற்காக மத்திய அரசு விற்க முயலும் பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் நேருவால் உருவாக்ககப்பட்டவைதான். பொருளாதாரப் பேரழிவில் இருந்து நாட்டைக் காக்க வேண்டும் என்பதற்காக நீண்டகால நோக்கில் நேரு உருவாக்கியதாகும்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சிக்கு வந்தபின், குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட விலையில்லா ஸ்கூல் பேக்கில் முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் புகைப்படங்களை நீக்கவேண்டாம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு எடுத்தார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய அரசியல் முதிர்ச்சியை வெளிப்படுத்துகிறார். ஆனால், மத்திய அரசு ஏன் நேருவை வெறுக்கிறது? உங்கள் பதிலை தேசத்துக்குத் தெரிவியுங்கள்.(பாஜக பெயரைக் குறிப்பிடாமல் தெரிவித்தார்)
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரை மத்திய அரசு விமர்சிப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், ராஜீவ் கேல் ரத்னா விருதின் பெயரை மாற்றியது வெறுப்பின் அடையாளமாக இருக்கிறது.
தேசத்தைக் கட்டமைக்க நேருவின், இந்திரா காந்தியின் அழியாப் பங்களிப்புகளை அழிக்க முடியாது. தேசத்துக்கான நேருவின் பங்களிப்புகளை யார் மறுக்கிறார்களோ அவர்கள்தான் வரலாற்றின் வில்லன்கள்''.
இவ்வாறு சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT