Published : 05 Sep 2021 03:14 AM
Last Updated : 05 Sep 2021 03:14 AM
ஆந்திர மாநிலம் திருப்பதி அடுத்துள்ள சந்திரகிரி மண்டலம் தான் சந்திரபாபு நாயுடுவின் சொந்த மண்டலமாகும். இவரது ஊரான நாராவாரிபள்ளியின் அருகே கங்குடு பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பாப்பி ரெட்டி. இவரது மனைவி ரேவதி. இவர்கள் இருவரும் கண் பார்வையற்றவர்களாவர்.
இவர்கள் ஒரு பேட்டரி ஆட்டோவை வங்கிக் கடனில் வாங்கி, அதன் மூலம்ஊர் ஊராக சென்று, அரிசி, பருப்பு மற்றும் சிறுதானியங்களை விற்று பிழைப்பு நடத்தி வந்தனர். இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். இவர்களின் மூத்தமகனான கோபால் (8), தனது கண்பார்வையற்ற பெற்றோர் படும் வேதனையை கண்டு, 2ம் வகுப்பு படிப்பை பாதியில் கைவிட்டார்.
பின்னர், அந்த ஆட்டோவை இயக்குவதற்கு கற்றுக்கொண்டார். அதன் பின்னர், ஆட்டோவின் பின்னால் தனது பெற்றோரை உட்கார வைத்துக்கொண்டு, ஊர் ஊராக திரிந்து, அரிசி, பருப்பு பொருட்களை விற்று குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். இதனிடையே வியாபாரம் செய்து முடித்த பின்னர், அவரது ஊரில் இருந்து திருப்பதி அலிபிரி பைபாஸ் வரை அந்த ஆட்டோவில் பயணிகளை ஏற்றி சம்பாத்தித்து, அதில் வரும் பணத்தில் இரு தம்பிகளுக்கும் பெற்றோர்களுக்கும் உதவி வருகிறார்.
பிரேக் போடுவதற்கு கால் கூட எட்டாத நிலையில், இந்த சிறு வயதில் பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆட்டோவில் திரியும் 8 வயது கோபாலை கண்ட அப்பகுதியின் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் வியப்பில் ஆழ்ந்தனர். உரிய உரிமம் இல்லாமல் எப்படி இவர் ஆட்டோ ஓட்டலாம் என சிலர் கோபாலை வழி மறித்தனர். சிலர் இவரது கதையை கேட்டு அதன் பின்னர் ஆட்டோ ஓட்ட அனுமதித்தனர்.
இவர்களது கதையை அறிந்த சில பயணிகள் பரிதாபப்பட்டு, இவரின் ஆட்டோவில் மட்டுமே ஏறுவதையும் வழக்கமாக கொண்டிருக்கின்றனர். மேலும் எவ்வித பேரமும் பேசாமல் சவாரி பணத்தையும் வழங்கி விடுவர்.
ஆட்டோவை ஓட்டும் போது சாலை கூட சரிவர தெரியாத 8 வயது சிறுவனின் இந்த வாழ்க்கை போராட்டம் சமூக வலைத்தளங்கள் மூலமாகவும், தொலைக்காட்சிகள் மூலமாகவும் வெளிவர தொடங்கியது. இந்த தகவல், முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு வரை எட்டியது. மேலும், அவரது மகனும், தெலுங்கு தேசம் கட்சியின் பொதுச் செயலாளருமான லோகேஷ் சிறுவன் கோபாலின் போராட்டத்தை கண்டு உடனடியாக அவரது குடும்ப செலவிற்கு ரூ.50 ஆயிரம் அனுப்புவதாகவும், மேலும், ஆட்டோவின் வங்கிக் கடனை தீர்ப்பதாகவும், கோபாலின் கல்விச் செலவு முழுவதையும் தெலுங்கு தேசம் கட்சியின் என்.டி.ஆர் அறக்கட்டளை ஏற்கும் எனவும், கோபாலின் பெற்றோரின் மருத்துவ செலவையும் தானே ஏற்பதாக வும் அறிவித்துள்ளார். மேலும், ஏதாவது வியாபாரம் செய்துகொள்ள ரூ.2 லட்சம் நிதி உதவி செய்வதாகவும் நேற்று அறிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT