Published : 04 Sep 2021 03:35 PM
Last Updated : 04 Sep 2021 03:35 PM

கடந்த 71 ஆண்டுகளில் உச்ச நீதிமன்றதில் 11 பெண்களுக்கு மட்டுமே நீதிபதி பதவி; 3 பேர் கடந்த மாதம் நியமனம்: ஓர் ஆய்வு

உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்ற நீதிபதி நாகரத்னா | படம் உதவி: ட்விட்டர்.

புதுடெல்லி

இந்திய தேசத்தில் உச்ச நீதிமன்றம் உருவாக்கப்பட்டு கடந்த 71 ஆண்டு கால வரலாற்றில் இதுவரை 11 பெண்கள் மட்டுமே நீதிபதி இருக்கையை அலங்கரித்துள்ளனர். அதில் 3 பெண் நீதிபதிகள் கடந்த மாதம் நியமிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏறக்குறைய 71 ஆண்டுகளாக உச்ச நீதிமன்றத்தில் பெண்களின் பங்களிப்பு வெறும் 8 பேர் மட்டுமே என்பது புள்ளிவிவரங்கள் வாயிலாகத் தெரியவருகிறது. அதிலும் குறிப்பாக உச்ச நீதிமன்றம் உருவாக்கப்பட்டு 39 ஆண்டுகளுக்குப் பின்புதான் முதல் பெண் நீதிபதியே நியமிக்கப்பட்டார்.

கடந்த செவ்வாய்க்கிழமை உச்ச நீதிமன்ற வரலாற்றில் இல்லாத வகையில் 9 நீதிபதிகள் பதவியேற்றனர். இவர்களில் 3 பேர் பெண் நீதிபதிகள். ஒரே நேரத்தில் உச்ச நீதிமன்றத்தில் 3 பெண் நீதிபதிகள் நியமிக்கப்படுவதும் இதுதான் முதல் முறை.

இந்த 3 பெண் நீதிபதிகளில் ஒருவரான கர்நாடக மாநில உயர் நீதிமன்ற நீதிபதி நாகரத்னா 2027-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக வரக்கூடும். அவ்வாறு தலைமை நீதிபதியாக வந்தால், இந்திய வரலாற்றில் முதல் பெண் தலைமை நீதிபதியாக நாகரத்னா இருப்பார்.

நீதித்துறையைப் பொறுத்தவரை கடந்த 71 ஆண்டுகளில் பெண்களின் பங்களிப்பு, பெண்களுக்கு ஒதுக்கப்படும் இடம், பிரதிநிதித்துவம் மிகவும் மோசமான அளவில்தான் இருந்துள்ளது என்பதைப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

உச்ச நீதிமன்றத்தில் மட்டுமல்லாமல் உயர் நீதிமன்றங்களிலும் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் குறைவாகவே இருந்துவருகிறது, ஆனால், கீழமை நீதிமன்றங்களில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களை ஒப்பிடும்போது சிறப்பாக இருக்கிறது.

1950-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் உருவாக்கப்பட்டதிலிருந்து கடந்த 39 ஆண்டுகளாக அங்கு பெண் ஒருவர் நீதிபதியாக நியமிக்கப்படவே இல்லை. 1989-ம் ஆண்டு முதல் முறையாக நீதிபதியாக பாத்திமா பீவி நியமிக்கப்பட்டார். அதன்பின் பாத்திமா பீவி தமிழகத்தின் ஆளுநராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1989-ம் ஆண்டிலிருந்து 5 ஆண்டுகளுக்குப் பின் 1994-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்துக்கு சுஜாதா வி.மனோகர் நியமிக்கப்பட்டார். அடுத்த 6 ஆண்டுகளுக்குப் பின் பெண் நீதிபதியாக நீதிபதி ருமா பால் நியமிக்கப்பட்டார்.

அதன்பின் 10 ஆண்டுகள் இடைவெளியில் எந்தப் பெண் நீதிபதியும் உச்ச நீதிமன்றத்தில் நியமிக்கப்படவில்லை. 2010-ம் ஆண்டில் நீதிபதியாக கியான் சுதா மிஸ்ராவும், 2011-ம் ஆண்டில் ரஞ்சனா பிரகாஷ் தேசாயும் நியமிக்கப்பட்டனர்.

உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி பாத்திமா பீவி

3 ஆண்டுகளுக்குப் பின் 2014-ம் ஆண்டில் தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி ஆர்.பானுமதி உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 4 ஆண்டுகளுக்குப் பின் 2018-ம் ஆண்டு இந்து மல்ஹோத்ரா நீதிபதியாகப் பதவியில் அமர்ந்தார். பார் கவுன்சிலில் இருந்து மூத்த வழக்கறிஞர் ஒருவர் நேரடியாக நீதிபதியாக நியமிக்கப்பட்ட 2-வது வழக்கறிஞர் மல்ஹோத்ரா என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது உச்ச நீதிமன்றத்தில் பெண் நீதிபதிகளாக இந்திரா பானர்ஜி, நாகரத்னா, ஹிமா கோலி, பால திரிவேதி என மொத்தம் 4 பேர் பணியாற்றி வருகின்றனர்.

உச்ச நீதிமன்றத்துக்குக் கடந்த 71 ஆண்டுகளில் 256 நீதிபதிகள் நியமிக்கப்பட்டதில் அதில் 11 பேர் மட்டுமே பெண் நீதிபதிகள். அதாவது 4.2 சதவீதம் மட்டுமே பெண்களுக்குப் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது உச்ச நீதிமன்றத்தில் 33 நீதிபதிகள் பதவியில் இருக்கும் நிலையில் 4 பேர் பெண் நீதிபதிகள் அதாவது 12 சதவீதம் பெண்களுக்குப் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் நீதிபதி ஆர்.பானுமதி

உயர் நீதிமன்றங்கள்

உயர் நீதிமன்றங்களைப் பொறுத்தவரை பெண்களுக்கான பிரதிநிதித்துவம் சிறப்பாக இல்லை. நாட்டில் உள்ள ஒட்டுமொத்த உயர் நீதிமன்றங்களில் உள்ள நீதிபதிகள் எண்ணிக்கையில் 11 சதவீதம் மட்டுமே பெண் நீதிபதிகள் இருக்கிறார்கள் எனப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இதில் 5 உயர் நீதிமன்றங்களில் பெண் நீதிபதிகளே இல்லை. அதாவது, மணிப்பூர், மேகாலயா, பாட்னா, திரிபுரா, உத்தரகாண்ட் உயர் நீதிமன்றங்களில் பெண் நீதிபதிகளே இல்லை. 6 உயர் நீதிமன்றங்களில் பெண் நீதிபதிகள் பங்கு என்பது 10 சதவீதத்துக்கும் குறைவாகவே இருக்கிறது. இதில் டெல்லி, சென்னை, சிக்கம் மாநில உயர் நீதிமன்றங்களில்தான் பெண் நீதிபதிகள் சதவீதம் 20 முதல் 25 சதவீதம்வரை இருக்கிறது.

மாவட்ட நீதிமன்றங்கள்

நீதித்துறையில் பெண்களின் பங்களிப்பு, பிரதிநிதித்துவம் அதிகமாக இருப்பது கீழமை நீதிமன்றங்களில்தான். 2017-ம் ஆண்டுவரை கிடைத்த புள்ளிவிவரங்கள் அடிப்படையில் கீழமை நீதிமன்றங்களில் பணியாற்றும் நீதிபதிகளில் 28 சதவீதம் பெண் நீதிபதிகள் உள்ளனர். இதில் பிஹார், ஜார்க்கண்ட், குஜராத்தில் 20 சதவீதத்துக்கும் குறைவாகப் பெண் நீதிபதிகள் பதவியில் உள்ளனர்.

தமிழகத்தில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் 37 சதவீதம் பெண் நீதிபதிகள் உள்ளனர். அதிகபட்சமாக மேகாலயாவில் 73 சதவீதம் பெண் நீதிபதிகளும், அதைத் தொடர்ந்து, கோவாவில் 65.91 சதவீதமும், சிக்கிமில் 64 சதவீதமும் பெண் நீதிபதிகள் பணியாற்றுகிறார்கள். தென் மாநிலங்களைப் பொறுத்தவரை தெலங்கானா மாநிலத்தில் 44 சதவீதம் பெண் நீதிபதிகள் உள்ளனர். தமிழகம், ஆந்திரா மாநிலங்களில் ஒரே மாதிரியாக 37 சதவீதமும், கேரளாவில் 33 சதவீதமும், கர்நாடகாவில் 28 சதவீதமும் பெண்கள் நீதிபதியாக உள்ளனர்.

ஆதாரம்: தி இந்து(ஆங்கிலம்)

தமிழில்: க.போத்திராஜ்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x