Published : 04 Sep 2021 10:18 AM
Last Updated : 04 Sep 2021 10:18 AM
குழந்தைகள் மற்றும் பதின்வயதினருக்கு கரோனா தடுப்பூசியில் அடுத்தகட்டப் பரிசோதனை நடத்த ஹைதராபாத்தைச் சேர்ந்த பயாலஜிக்கல்-இ நிறுவனத்துக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு (டிசிஜிஐ) அனுமதி அளித்துள்ளது.
இந்த நிறுவனம் குழந்தைகள் மற்றும் பதின்வயதினருக்காக கார்பிவேக்ஸ் என்ற தடுப்பூசியைத் தயாரித்துள்ளது.
இந்தியாவில் ஏற்கெனவே குழந்தைகளுக்கான தடுப்பூசி பயன்பாட்டுக்கு ஜைடஸ் கெடிலா நிறுவனத்தின் ஜைகோவ்-டி எனும் மருந்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜைகோவ்-டி மருந்து 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பாரத் பயோடெக்கின் கோவாக்சின் மருந்து 3-வது கட்ட கிளினிக்கல் பரிசோதனையில் இருக்கிறது. இந்த மாதத்துக்குள் கோவாக்சின் தடுப்பூசி குழந்தைகளுக்குத் தயாராகிவிடும் என நம்பப்படுகிறது.
இந்நிலையில் தற்போது மூன்றாவதாக பயாலஜிக்கல்-இ நிறுவனத்தின் கார்பிவேக்ஸ் தடுப்பூசி பரிசோதனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 44 கோடி குழந்தைகள் உள்ளனர். இதில் 12 முதல் 17 வயதுள்ளவர்கள் 12 கோடி. ஆதலால், தடுப்பூசியின் பாதுகாப்பு, நோய் எதிர்ப்பு சக்தி திறன் ஆகியவை முதலில் 12 முதல் 17 வயதுள்ள பிரிவினருக்குப் பரிசோதிக்கப்பட்டு பின்னர் குழந்தைகளுக்குப் பரிசோதிக்கப்பட்டு வருகிறது.
கார்பிவேக்ஸ் தடுப்பூசி புரோட்டின் ஆன்டிஜென் முறையில் அதாவது கரோனா வைரஸில் உள்ள ஸ்பைக் புரோட்டின் அமைப்பை எடுத்துத் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியாகும். இந்தத் தடுப்பூசியை உடலில் செலுத்துவதன் மூலம் கரோனா வைரஸை எதிர்க்கும் புரோட்டீன்களை அதிக அளவில் செல்கள் பிரதி எடுத்து உற்பத்தி செய்து நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டிவிட்டு நோய்த் தொற்றிலிருந்து பாதுகாக்கும். பயாலஜிக்கல்-இ தடுப்பூசி அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக நிதி ஆயோக் சுகாதார உறுப்பினர் வி.கே.பால் தெரிவித்துள்ளார்.
பயாலஜிக்கல்-இ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மஹிமா தத்லா வெளியிட்ட அறிக்கையில், “எங்கள் தடுப்பூசியின் அடுத்தகட்டப் பரிசோதனைக்கு டிசிஜிஐ ஒப்புதல் அளித்தது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த ஒப்புதல் எங்களை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் செல்லும். வெற்றிகரமாகத் தடுப்பூசியை உற்பத்தி செய்து, தடுப்பூசி பற்றாக்குறையை நீக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT