Published : 04 Sep 2021 09:18 AM
Last Updated : 04 Sep 2021 09:18 AM
12 உயர் நீதிமன்றங்களில் காலியாக இருக்கும் நீதிபதிகளின் பதவியிடங்களை நிரப்புவதற்காக 68 பேரின் பெயர்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.
அலகாபாத், ராஜஸ்தான், கொல்கத்தா, மெட்ராஸ், ஜார்க்கண்ட், ஜம்மு காஷ்மீர், மத்தியப்பிரதேசம், கர்நாடகம், பஞ்சாப் ஹரியானா, கேரளா, சத்தீஸ்கர், அசாம் ஆகிய மாநில உயர் நீதிமன்றங்களுக்கு புதிய நீதிபதிகளை நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 25ம் தேதி முதல் செப்டம்பர் 1ம் தேதிவரை தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையில் கொலிஜியம் ஆலோசனை நடத்தியது.
இதில் மொத்தம் 112 பேரின் பெயர்கள் ஆலோசிக்கப்பட்டுள்ளன. இதில் 82 பேர் பார் கவுன்சிலில் இருந்தும், 31 பேர் நீதித்துறை சார்பிலும் ஆலோசிக்கப்பட்டது. முடிவில் பார் கவுன்சிலில் இருந்து 44 பேரும், நீதித்துறையிலிருந்து 24 பேரின் பெயரும் கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் 10 பெண் நீதிபதிகள் பெயருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் மிசோரத்தைச் சேர்ந்த பழங்குடியினப் பிரிவைச் சேர்ந்த மரில் வான்குங் என்பவர் கவுகாத்தி உயர் நீதிமன்றத்துக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். மிசோரத்திலிருந்து நீதிபதிக்காக தேர்வாகும் முதல் பழங்குடியினப் பெண் ஆவார்.
தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான கொலிஜியம் சமீபத்தில் உச்ச நீதிமன்றத்துக்கு 3 பெண் நீதிபதிகள் உள்ளிட்ட 9 பேரின் பெயர்களை பரிந்துரை செய்து அவர்களும் கடந்த மாதம் 31ம் தேதி பதவி ஏற்றனர்.
இதில் அபெய் ஸ்ரீவாஸ் ஓகா, விக்ரம் நாத், ஜிதேந்திர குமார் மகேஸ்வரி, ஹிமா கோலி, பி.வி.நாகரத்னா, சி.டி.ரவிகுமார், எம்.எம்.சுந்தரேஷ், பேலா எம் திரிவேதி, பிஎஸ் நரசிம்மா ஆகியோர் பதவி ஏற்றது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT