Published : 03 Sep 2021 03:06 PM
Last Updated : 03 Sep 2021 03:06 PM
மத்திய அரசு அறிவித்துள்ள தேசிய பணமாக்கல் திட்டத்தின் (என்எம்பி) நோக்கங்களை மத்திய அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அடுத்த 4 ஆண்டுகளில் வருவாயைப் பெருக்குவதுதான் உண்மையான நோக்கமா என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் அடுக்கடுக்காக மத்திய அரசுக்குக் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதி திரட்டும் நோக்கில் அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் சொத்துகளைக் குத்தகைக்கு விடும் திட்டம்தான் தேசிய பணமாக்கல் பைப்லைன் (National Monetisation Pipeline) திட்டம். இதைக் கடந்த மாதம் 23-ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
அதன்படி, சாலைகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள், மின் உற்பத்தி மற்றும் விநியோகம், சுரங்கம், எரிவாயு குழாய் ஆகிய அரசின் சொத்துகள் தனியாருக்குக் குத்தகைக்கு விடப்படவுள்ளன. இதன் மூலம் அடுத்த நான்கு ஆண்டுகளில் ரூ.6 லட்சம் கோடி நிதி திரட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
மத்திய அரசின் பணமாக்கல் திட்டம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் இன்று மும்பையில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது பல்வேறு கேள்விகளை மத்திய அரசுக்கு எழுப்பினார்.
அவர் பேசியதாவது:
''மத்திய அரசு அறிவித்துள்ள தேசிய பணமாக்கல் திட்டம் தொடர்பாக காங்கிரஸ் கட்சிக்கு சந்தேகங்களும், எதிர்ப்புகளும் உள்ளன.
அடுத்த 4 ஆண்டுகளில் குறிப்பிட்ட சில சொத்துகளில் இருந்து ரூ.6 லட்சம் கோடி வருவாய் ஈட்டப்போவதாக அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசு அடையாளம் கண்டுள்ள அந்தச் சொத்துகள் தற்போது ஆண்டுதோறும் கண்டிப்பாக வருவாய் ஈட்டி வருவதாக இருக்கின்றன.
அப்படியென்றால், நடப்பாண்டில் வெளியிடப்படாத அந்த வருவாய்க்கும், அடுத்த 4 ஆண்டுகளில் கிடைக்கும் ரூ.6 லட்சம் கோடிக்கும் இடையிலான வருவாய் வேறுபாட்டை அரசு மதிப்பிட்டதா?
அப்படி மதிப்பிட்டிருந்தால், அடுத்த 4 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டுக்கும் இரு தரப்புக்கும் இடையிலான வருவாய் வேறுபாடு என்ன? அதாவது குத்தகைக்கு விடாமல் இருந்தால் அந்தச் சொத்துகளில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் கிடைக்கும் வருவாய், குத்தகைக்கு விடப்பட்டால் ஒவ்வொரு ஆண்டும் கிடைக்கும் வருவாய் ஆகியவற்றின் வேறுபாட்டை விளக்க வேண்டும்.
தேசிய உள்கட்டமைப்புத் திட்டத்துக்கு ரூ.100 லட்சம் கோடி தேவைப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியென்றால், அடுத்த 4 ஆண்டுகளில் திரட்டப்படும் இந்த ரூ.6 லட்சம் கோடி எவ்வாறு தேசிய உள்கட்டமைப்புத் திட்டத்துக்குப் போதுமானதாக இருக்கும்?
அடுத்த 4 ஆண்டுகளில் கிடைக்கும் ரூ.6 லட்சம் கோடி எந்தெந்தத் துறையில் இருந்து கிடைக்கிறது என்பதை மத்திய அரசு குறிப்பிட்டு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
நடப்பு நிதியாண்டு பட்ஜெட்டில் ரூ.5.5 லட்சம் கோடி நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அந்தப் பற்றாக்குறையைச் சரிசெய்ய இந்தத் தொகை பயன்படாதா?
ரூ.6 லட்சம் கோடி கிடைக்கும் என அடையாளம் காணப்பட்டு குத்தகைக்கு விடுவதற்கு இருக்கும் சொத்துகளின் ஒட்டுமொத்த மூலதன முதலீடு என்ன என்பதையும் அரசு தெரிவிக்க வேண்டும்.
குத்தைக்கு விடப்படுவதாக இருந்தால், தற்போது அந்தந்தத் துறைகளில் பணியாற்றுவோருக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படுமா, இட ஒதுக்கீடு முறை கடைப்பிடிக்கப்படுமா?
தொழில் மற்றும் பிற துறைகளில் சேவை மற்றும் பொருட்களின் விலையில் தேசிய பணமாக்கல் திட்டத்தின் தாக்கம், பாதிப்பு குறித்து அரசு ஏதேனும் ஆய்வு செய்துள்ளதா என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும்.
காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது, அரசுக்கு வருமானம் வராத, இழப்பில் இயங்கும் நிறுவனங்களைத்தான் விற்பனை செய்தது. ஆனால், அதற்கு முற்றிலும் மாறாக, நரேந்திர மோடி அரசு செயல்படுகிறது. காங்கிஸ் அரசு ஒருபோதும் நாட்டின் நிலையான சொத்துகளை விற்கவில்லை.
பணமாக்கல் திட்டத்தில் முற்றுரிமையை, தனி நபர், இரு நபர் ஆதிக்கத்தைத் தவிர்க்க, விருப்ப விண்ணப்பங்கள் கோரி திட்டத்தைச் செயல்படுத்தத் திட்டம் உள்ளதா?
துறைமுகம், விமான நிலையம், தொலைத்தொடர்பு, மின்துறை ஆகிவற்றில் ஒரு சில நிறுவனங்களின் ஆதிக்கத்தை மட்டும் தடுத்து நிறுத்த என்ன மாற்று முறைகள் கைவசம் உள்ளன?
கட்டமைக்க 70 ஆண்டு காலம் தேவைப்பட்ட சொத்துகளைப் பகல் கொள்ளையடிக்க மோடி அரசு என்ன திட்டம் வைத்துள்ளது?
தற்போது விற்பதற்காக அடையாளம் காணப்பட்டுள்ள சொத்துகள் மூலம் ரூ.1.30 லட்சம் கோடி வருவாய் கிடைக்கிறது. தனியாருக்கு விற்றால் ரூ.1.50 லட்சம் கோடி கிடைக்கும். ஆக, அரசுக்குக் கிடைப்பது ரூ.20 லட்சம் கோடிதானே. இதற்காகவா 70 ஆண்டுகளாகக் கட்டமைத்த நிறுவனங்களை விற்கிறீர்கள். இது பகல் கொள்ளை.
குத்தகைக்கு அல்லது விற்பனை செய்யப்பட உள்ள சொத்துகளின் நடப்பு ஆண்டு வருவாயை மத்திய அரசு வெளியிட வேண்டும்.
கொங்கன் ரயில்வே- டெல்லி மும்பை சரக்குப் போக்குவரத்து பாதையை விற்க திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் எந்தவிதமான ஆலோசனையும், விவாதங்களும் நடத்தாமல் தவிர்த்தது ஏன்?
4 ஆண்டுகளுக்குப் பின் அந்தச் சொத்துகள் மத்திய அரசின் வசம் திரும்பி வரும்போது, அதன் மதிப்பு என்னவாக இருக்கும் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.
தேசிய பணமாக்கல் திட்டத்தின் நோக்கங்கள் என்ன, 4 ஆண்டுகளில் வருவாயைப் பெருக்குவதுதான் மட்டும்தான் நோக்கமா?
நிதியமைச்சருக்கு கண்டிப்பாக இந்தியாவில் வேறு எங்காவது சொந்த வீடு இருக்கும். அந்த வீட்டை எனக்கு 99 ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு விடட்டும், வெற்றுக் காகிதத்தில் மட்டும் அந்த வீட்டுக்கு அவர்தான் உரிமையாளர் என்று இருக்கட்டும். 99 ஆண்டுகளுக்குப் பின் நான் என்ன திருப்பிக் கொடுப்பேன். நான் வீட்டுக்கு உரிமையாளராக இல்லாதபோது, நான் வீட்டைப் பராமரிப்பேனா, பழுதுநீக்குவேனா, மேம்படுத்துவேனா?
அதேபோலத்தான் 4 ஆண்டுகள் குத்ததைக்குச் சொத்துகளைத் தனியாரிடம் விடும்போது, சொத்தின் உரிமையாளராக அரசு இருக்கும்போது அது பராமரிக்கப்படுமா, செப்பனிடப்படுமா? சொத்துகள் விற்பனையின் ஆபத்து குறித்து மக்கள் குரல் எழுப்ப வேண்டும்''.
இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT