Published : 03 Sep 2021 12:35 PM
Last Updated : 03 Sep 2021 12:35 PM

மோடி அரசைப் பார்த்து தீவிரவாதிகள் பயப்படுகிறார்கள்: ராஜ்நாத் சிங் பெருமிதம்

பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசிய காட்சி | படம் உதவி: ட்விட்டர்.

கவாடியா 

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசைப் பார்த்து தீவிரவாதிகள் அச்சமடைந்துள்ளனர். கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக மோடி பொறுப்பேற்றபின் எந்தவிதமான மிகப்பெரிய தீவிரவாதத் தாக்குதலும் நடக்கவில்லை என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதத்தோடு தெரிவித்தார்.

குஜராத் மாநிலம், நர்மதா மாவட்டத்தில் உள்ள கவேடியா நகரில், பாஜக மாநில செயற்குழுக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார்.

அப்போது அவர் பேசியதாவது:

''என்ன நடந்தாலும் நாங்கள் தீவிரவாதிகளை வெல்லவிடமாட்டோம். பிரதமர் மோடி கடந்த 2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபின், ஜம்மு காஷ்மீரைத் தவிர்த்து நாட்டில் எந்த நகரிலும் மிகப்பெரிய தீவிரவாதத் தாக்குதல் நடக்கவில்லை.

இதுதான் எங்களின் மிகப்பெரிய சாதனை. இது சாதாரண, சின்ன விஷயம் அல்ல. தீவிரவாதிகள், தீவிரவாதத்துக்கு எதிராக எந்தவிதமான சமரசக் கொள்கையும் பிரதமர் மோடிக்கு இல்லை.

கடந்த 2018-ம் ஆண்டில் இந்திய விமானப்படை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகளின் புகலிடங்களை அழித்த துல்லியத் தாக்குதல் என்பது தங்களின் சொந்த மண்ணிலும், வெளியிலும் தீவிரவாதத்தை ஒருபோதும் இந்தியா பொறுக்காது என்று உலக நாடுகளுக்கு இந்தியா விடுத்த தெளிவான செய்தியாகும்.

தீவிரவாதிகள் தங்களுக்குப் பாதுகாப்பான இடத்தில்கூட இனிமேல் பாதுகாப்பு இருக்காது என்று இப்போது உணரத் தொடங்கிவிட்டார்கள். ராணுவத்தில் நீண்டகாலமாகக் கிடப்பில் இருந்த ஒரு பதவி, ஒரு ஓய்வூதியத் திட்டத்தையும் பிரதமர் மோடி தீர்த்துவைத்தார்.

அயோத்தி ராமர் கோயில் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது. ராமர் கோயில் கட்டுவதற்காக பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவத்துக்குப் பின், பாஜக மூன்றுமுறை தான் ஆட்சி அமைப்பதைத் தியாகம் செய்துள்ளது''.

இவ்வாறு ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x