Published : 02 Sep 2021 05:33 PM
Last Updated : 02 Sep 2021 05:33 PM
கடந்த 2014-ம் ஆண்டிலிருந்து சர்வதேச சந்தையில் பெட்ரோலியக் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதிலும், 7 ஆண்டுகளாக பெட்ரோல், டீசல், காஸ் மீதான விலையை உயர்த்தி ரூ.23 லட்சம் கோடியை மோடி தலைமையிலான அரசு வசூலித்துள்ளது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
கேரளாவின் வடக்கு மாவட்டத்தில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி புதிதாக அமைக்கப்பட்டதையடுத்து, காணொலி மூலம் நடந்த கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று பங்கேற்றார்.
அப்போது அவர் பேசியதாவது:
''நாட்டின் பொருளாதாரத்தை மோடி அரசு தவறாகக் கையாண்டுவருவது தெளிவாகத் தெரிகிறது. இந்த தேசம் கடந்த 70 ஆண்டுகளாகக் கட்டமைத்ததை தனது சில நண்பர்களுக்காக மோடி அரசு வழங்கவுள்ளது.
தனியார் மயத்தை காங்கிரஸ் எதிர்க்கவில்லை. ஆனால், தனியார் மயமாக்கும் திட்டத்தையும் பகுத்தறிந்து செயல்படுத்த வேண்டும். நாட்டின் ரத்தினங்களாக இருக்கும் நிறுவனங்களை காங்கிரஸ் தனியார் மயமாக்கவில்லை.
உதாரணமாக இந்தியாவின் முதுகெலும்பாக இருக்கும் ரயில்வே துறையைத் தனியார் மயமாக்கவில்லை. இந்தியாவின் மகுடத்தில் ரத்தினங்களாக இருக்கும் நிறுவனங்களை விற்றால் காங்கிரஸ் கண்டிப்பாக எதிர்க்கும்.
மத்திய அரசு ஜிடிபிக்குப் புதிய விளக்கத்துடன் வந்து உயர்த்தி வருகிறது. ஜி-காஸ், டி-டீசல், பி-பெட்ரோல் ஆகிய 3 எரிபொருள் விலையையும் மத்திய அரசு உயர்த்தி வருகிறது.
கடந்த 2014-ம் ஆண்டிலிருந்து சர்வதேச சந்தையில் பெட்ரோலியக் கச்சா எண்ணெய் விலை சரிந்து வரும் நிலையில் கடந்த 7 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல், காஸ் விலை அதிகரித்து வருகிறது. கடந்த 7 ஆண்டுகளாக பெட்ரோல், டீசல், காஸ் விலையை உயர்த்தி ரூ.23 லட்சம் கோடியை மோடி அரசு ஈட்டியுள்ளது. அந்தப் பணம் எங்கே போனது?
பிரதமர் மோடி தனது நெருங்கிய சில நண்பர்களுக்காக விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு வர்த்தகர்கள், அமைப்புசாரா துறை, சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள், ஊதியம் பெறும் பிரிவினர், நேர்மையான தொழிலதிபர்கள் ஆகியோரிடம் இருந்து பண மதிப்பிழப்பு மூலம் பணத்தைச் செல்லாததாக ஆக்கினார். இந்த சக்திகளுக்கு எதிராகப் போராட வேண்டும்''.
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், மாநிலத் தலைவர் கே.சுதாகரன், எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீஸன், முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, ரமேஷ் சென்னிதலா ஆகியோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT