Published : 02 Sep 2021 03:34 PM
Last Updated : 02 Sep 2021 03:34 PM
இந்தியாவில் சென்னை, கோவை உள்ளிட்ட 35 நகரங்களைச் சேர்ந்த 8 ஆயிரம் இளைஞர்களுக்கு தொழில்நுட்பம், வாடிக்கையாளர் சேவை, செயலாக்கம் உள்ளிட்ட பிரிவுகளில் நேரடி வேலைவாய்ப்பு வழங்கப்படும் என அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமேசான் நிறுவனத்தின் மனிதவளத்துறைத் தலைவர் தீப்தி வர்மா அளித்த பேட்டியில் கூறியதாவது:
''இந்தியாவில் சென்னை, கோவை, பெங்களூரு, லூதியானா, ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை, நொய்டா, அமிர்தசரஸ், அகமதாபாத், போபால், ஜெய்ப்பூர், கான்பூர், லூதியானா, சூரத், புனே உள்ளிட்ட 35 நகரங்களில் உள்ள 8 ஆயிரம் இளைஞர்களுக்கு இந்த ஆண்டு நேரடி வேலைவாய்ப்பு வழங்க உள்ளோம்.
இந்த இளைஞர்களுக்குத் தொழில்நுட்பம், வாடிக்கையாளர் சேவை, செயலாக்கம், போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வேலைவாய்ப்பு வழங்கப்படும். எந்திர அடிப்படையிலான அறிவியல் பிரிவுகளிலும் வேலைக்கு ஆட்களைச் சேர்க்க இருக்கிறோம். குறிப்பாக மனிதவளம், நிதி, சட்டத்துறை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கும் இளைஞர்களை வேலைக்கு அமர்த்த இருக்கிறோம்.
2025-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க அமேசான் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஏற்கெனவே 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கிவிட்டது. கரோனா பெருந்தொற்றுக் காலத்தில்கூட அமேசான் நிறுவனம் 3 லட்சம் பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு வழங்கியது. அனைவரும் காணொலி மூலமே தேர்வு செய்யப்பட்டனர்.
இந்தியாவில் அமேசான் வளர்ந்து வருகிறது. மிகப்பெரிய அளவில் இளைஞர்களை வேலைக்கு அமர்த்த இருக்கிறோம். வரும் 16-ம் தேதி இந்தியாவில் மிகப்பெரிய அளவில் இளைஞர்களுக்கு வழிகாட்டும் முகாம் நடத்த இருக்கிறோம்.
காணொலி மூலம் நடக்கும் இந்த முகாமில், அமேசான் உயர் அதிகாரிகள், ஊழியர்கள் தங்களின் அனுபவங்கள், பணிச் சூழல், நிறுவனத்தின் சூழல் ஆகியவற்றைப் பகிர்ந்து கொள்வார்கள். 140 அமேசான் ஊழியர்கள், 2 ஆயிரம் பேருக்குப் பயிற்சி முகாம்களையும் நடத்த உள்ளனர்.
இந்தப் பயிற்சி முகாமில் இளைஞர்களுக்குத் திறமையான முறையில் வேலை தேடுவது, பயோ டேட்டா வடிவமைத்தல், நேர்காணலில் எவ்வாறு பங்கேற்பது, பதில் அளிப்பது போன்ற அறிவுரைகள், வழிகாட்டல்கள் வழங்கப்படும்''.
இவ்வாறு தீப்தி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT