Published : 02 Sep 2021 03:13 AM
Last Updated : 02 Sep 2021 03:13 AM
காதல் சின்னமான தாஜ்மகால் உலக அதிசயமாகவும், யுனெஸ் கோவின் பாதுகாக்கப்பட்ட சின்ன மாகவும் உள்ளது. கரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்த தாஜ்மகால், கடந்த ஜூன் 16-ம் தேதி திறக்கப்பட்டது. கடந்த திங்கட்கிழமை கிருஷ்ண ஜெயந்தி அன்று ஒரு குடும்பத்தினர் தாஜ்மகாலுக்கு வந்தனர். அவர்களில் ஒரு சிறுவன் கிருஷ்ணர் போல் உடை அணிந்திருந்தான்.
இதனால், தாஜ்மகாலில் இருந்த இந்திய தொல்லியல் ஆய்வக (ஏஎஸ்ஐ) அலுவலர்கள், சிறுவனை உள்ளே அனுமதிக்க மறுத்தனர். சிறப்பு அனுமதி பெற்று வருமாறு சிறுவன் குடும்பத்தினரை திருப்பி அனுப்பினர். இதனால் சிறுவனின் குடும்பத்தினர் தாஜ்மகாலை சுற்றிப் பார்க்காமல் ஏமாற்றத்துடன் திரும்பினர். இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலானது.
இச்சம்பவத்துக்கு ஆக்ராவின் இந்து அமைப்புகள் கண்டன குரல் எழுப்பியுள்ளன. ‘‘ஏஎஸ்ஐ அதிகாரிகள் மன்னிப்பு கேட்க வேண்டும். மறுத்தால் தாஜ்மகாலுக்குள் எந்த பார்வை யாளரையும் நுழைய விடாமல் போராட்டம் நடத்துவோம்’’ என்றுராஷ்டிரிய இந்து பரிஷத்(இந்தியா) அமைப்பு எச்சரித்துள்ளது.
இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் ஆக்ரா மண்டல ஏஎஸ்ஐ துணை கண்காணிப்பாளர் வசந்த் கே.ஸ்வர்ன்கர் கூறும்போது, ‘‘தாஜ்மகாலில் எந்த விளம்பர நடவடிக்கைகளுக்கும் அனுமதி இல்லை. இதற்கு அலுவலகத்தில் முன்கூட்டியே சிறப்பு அனுமதி பெற வேண்டும். இந்த விதிகளை சுட்டிக் காட்டியே அனுமதி மறுக்கப்பட்டது’’ என்று தெரிவித்தார்.
இதற்கிடையில், தாஜ் மகாலுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT