Published : 01 Sep 2021 04:49 PM
Last Updated : 01 Sep 2021 04:49 PM

கேரளாவில் மீண்டும் லாக்டவுன்?- மத்திய அரசு பரிந்துரை

திருவனந்தபுரம்

கேரளாவில் கரோனா தொற்று கட்டுப்பாடு இல்லாமல் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் அங்கு குறிபிட்ட பகுதிகளில் ‘ஸ்மார்ட்’ லாக்டவுன் அமல்படுத்தலாம் என மத்திய அரசு பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேரளாவில் அண்மைகாலமாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அங்கு மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. கேரளாவில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் அங்கிருந்து மக்கள் அண்டை மாநிலங்களான தமிழகம் மற்றும் கர்நாடகாவுக்கு செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கேரளாவில் கரோனாவை கட்டுப்படுத்த மத்திய குழு அங்கு சென்று ஆய்வு நடத்தியது. கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என கேரள அரசுக்கு மத்திய குழு பரிந்துரைத்துள்ளது.

கேரளாவில் ஓணம் பண்டிகையை ஒட்டி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு தொடர்ந்து கரோனா தொற்று எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்து காணப்படுகிறது. இதனால் கேரளாவில் கரோனாவை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுப்பது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் சில பரிந்துரைகளை அளித்துள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கேரளாவில் 85 சதவீதத்திற்கும் அதிகமான கோவிட் நோயாளிகள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால் அவர்களை கண்காணிப்பதில் சுணக்கம் காணப்படுகிறது.

வீட்டில் குணமடையும் நோயாளிகள் அனைத்து பாதுகாப்பு விதிகளையும் பின்பற்றுவதில்லை, அதனால் தான் கேரளாவால் வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த முடியவில்லை.

நாட்டின் மிக உயர்ந்த தினசரி தொற்றுள்ள மாநிலமாக கேரளா உள்ளது. கேரளாவில் கரோனா தொற்று உயர்ந்து வருவதால் அண்டை மாநிலங்களிலும் அதன் தாக்கத்தை உணர முடிகிறது.

இதனால் தினசரி தொற்று உயர்ந்து வருவதை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். இதற்கு ‘ஸ்மார்ட்’ ஆன குறிப்பிட்ட முறையில் லாக்டவுனை அமல்படுத்தலாம்.

நுண் கட்டுப்பாட்டு மண்டலங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து மாவட்ட அளவில் மட்டுமல்லாமல், தாலுகா அளவில் கூட கட்டுப்பாடுகளை அமல்படுத்தலாம். குறிப்பிட்ட பகுதிகளில் ஆழமாக கவனம் செலுத்த வேண்டும்.

கடலோர மாநிலமாகவும், விடுமுறை நாட்களில் மக்கள் தேடி வரும் சுற்றுலா பகுதிகள் அதிகமாகவும் இருப்பதால் கட்டுப்பாட்டு மண்டலங்களில் கடுமையான நடவடிக்கைகளை அவசரமாக அமல் வேண்டும். மக்கள் நடமாட்டத்தைக் பெருமளவில் கட்டுப்படுத்த வேண்டும்.

கேரளாவின் தினசரி தொற்று விகிதம் 19 சதவீதம் என்ற அளவில் உள்ளது. அது அதன் அண்டை மாநிலங்களுக்கும் பரவிவிடும் ஆபத்துள்ளது.

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x