Published : 01 Sep 2021 03:10 PM
Last Updated : 01 Sep 2021 03:10 PM
பஞ்சாபில் தலைமுறைகளாக குதிரைகளை விற்கும் குடும்பத்தில் ‘நவாப்’, ’சிக்கந்தர்’ என்ற இரண்டு
மிகவும் பிரபலமாக உள்ளன. இக்குதிரைகளுக்கு ரூ.1.49 கோடி விலை கொடுத்து வாங்க முன்வந்தும் அதன் உரிமையாளர் விற்க மறுத்து விட்டார்.
ராஜாக்கள் காலம் முதல் பஞ்சாப் மாநிலத்தில் பலருக்கும் குதிரைகள் வளர்க்கும் வழக்கம் இன்றும் தொடர்கிறது. இவர்களில் ஒன்றாக இருப்பது பர்னாலா மாவட்டத்தின் துர்கோட் கிராமத்தில் வசிக்கும் ஜெதீந்தர்சிங்கின் குடும்பம்.
இவர்களுக்கு தம் முன்னோர்களை போல் மிகவும் உயர்ந்தரக குதிரைகளை வளர்ப்பதில் ஆர்வம் அதிகம் உள்ளது. இதற்காக ஜெதீந்தரின் மகனான ஜெக்தீப்சிங், சமீபத்தில் குஜராத்திலிருந்து ரூ.75 லட்சம் விலையில் சிக்கந்தர், ரூ.45 லட்சத்தில் நவாப் எனும் பெயர்களிலான குதிரைகளை வாங்கினார்.
இவ்விரண்டு குதிரைகளையும் செல்லமாக வளர்த்து வரும் ஜெக்தீப்சிங், பல முக்கிய சந்தைகளுக்கு அவற்றை கொண்டு செல்கிறார். அப்போது, அவற்றின் உடல்வாகு, கம்பீரத்தை கண்டு வியந்து பல குதிரை பிரியர்கள் விலைக்கு கேட்பது உண்டு.
இந்தவலையில், சிக்கந்தர் மற்றும் நவாப் குதிரைகளை சமீபத்தில் லூதியானாவின் குதிரை சந்தையில் ரூ.1.49 கோடி வரை விலைக்கு கேட்கப்பட்டது. இதற்கு ஜெக்தீப் தன் குதிரைகளை விற்பனை செய்ய மறுத்து விட்டார்.
இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் ஜெக்தீப்சிங் கூறும்போது, ‘இவற்றை விட உயர்ந்த ‘நாக்’ எனும் ரகத்தின் பிரகாசமான குதிரை எனது தந்தையிடம் உள்ளது.
இதை ரூ.2.5 கோடிக்கு கேட்டும் அவர் விற்க மறுத்து விட்டார். ஏனெனில், அந்த நாக் ரக குதிரை ரோஹத்கர் ராஜ குடும்பத்தில் பிறந்தது’ எனத் தெரிவித்தார்.
பட்டியாலாவில் இதுபோல் உயர்ரகத்திலான 15 குதிரைகளுடன் ஜெக்தீப்சிங் ஒரு பண்ணை வைத்துள்ளார். அவற்றை தம் குடும்பத்தின் கவுரவமாக எண்ணி வளர்க்கும் இவர் அதில் எதையும் விற்பனை செய்வதில்லை.
பஞ்சாபிகள் இடையே குதிரைகளின் பண்ணை இருப்பதும் செல்வந்தர்கள் மற்றும் பிரபலமானவர்களின் அங்கமாக உள்ளது. இம்மாநிலத்தின் காங்கிரஸ் முதல்வரான கேப்டன் அம்ரீந்தர்சிங்கிடமும் விலை உயர்ந்த குதிரைகளின் பண்ணை உள்ளது.
இவர் ஒருமுறை பாகிஸ்தான் சென்றிருந்த போது அவருக்கு அங்குள்ள பஞ்சாபின் முதல்வரால் ‘சுல்தான்’ என்ற பெயரிலான விலை உயர்ந்த குதிரை பரிசாக அளிக்கப்பட்டது.
பல பஞ்சாபி மொழிப் பாடகர்களும், நடிகர்களும் கூட குதிரை பண்ணைகளை வைத்து பராமரிக்கின்றனர். சீக்கியர்களின் முக்கிய பண்டிகைக் காலங்களில் தம் குதிரைகளில் சாகஸம் செய்து காண்பிப்பதும் பஞ்சாபிகள் இடையே பிரபலம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT