Last Updated : 01 Sep, 2021 01:20 PM

52  

Published : 01 Sep 2021 01:20 PM
Last Updated : 01 Sep 2021 01:20 PM

இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும்வரை அரசியலமைப்பும், பெண்களும் பாதுகாப்பாக இருப்பார்கள்: சி.டி.ரவி பேச்சு

பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி | கோப்புப்படம்

கலாபுர்கி

இந்தியாவில் இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும்வரை அரசியலமைப்புச் சட்டமும், பெண்களும் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று பாஜக தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் கலாபுர்கி நகரில் பாஜக தேசிய பொதுச் செயலாளரும், தமிழக பாஜக பொறுப்பாளருமான சி.டி.ரவி நேற்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

''இந்தியாவில் இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும்வரை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்புச் சட்டம் இருக்கும். இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும்வரை அனைவருக்கும் சமமான வாய்ப்பு கிடைக்கும். இந்துக்கள் சிறுபான்மையினராக மாறினால், ஆப்கானிஸ்தானில் என்ன நடக்கிறதோ அதுதான் இங்கும் நடக்கும்.

அம்பேத்கரின் அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க விரும்புபவர்கள் உண்மையை மறந்துவிடக் கூடாது. மதச் சார்பின்மை, மத சகிப்புத்தன்மை ஆகியவை இந்துக்களின் ஆழ்ந்த நம்பிக்கை. பெரும்பான்மை மக்கள் சகிப்புத்தன்மையுடன் இருக்கும்வரை, அங்கு மதச்சார்பின்மை இருக்கும். பெண்களுக்கும் பாதுகாப்பு கிடைக்கும்.

ஆனால், சகிப்புத்தன்மை சிறுபான்மையாக மாறினால், ஆப்கானிஸ்தான் சூழல் போன்று உருவாகிவிடும். இந்துக்கள் அல்லாதோர் பெரும்பான்மையானால், ஷரியத் சட்டம் பற்றிப் பேசுவார்கள். அம்பேத்கரின் அரசியலமைப்புச் சட்டம் பற்றிப் பேசமாட்டார்கள்.

திருப்திப்படுத்தும் அரசியல் செய்யும் செயலை காங்கிரஸ் நிறுத்தி, நேர்மையான அரசியல் செய்ய வேண்டும். திருப்திப்படுத்தும் அரசியல் அதிகமான பாகிஸ்தானைத்தான் உருவாக்கும். தற்காலிகமாக அதிகாரம் வழங்கிடலாம். ஆனால், அதிகமான பாகிஸ்தானைத்தான் உருவாக்கும். இது நடக்க வேண்டாம் என நீங்கள் விரும்பினால், நாட்டின் முதல் கொள்கையான நேர்மையான அரசியல் செய்யுங்கள்.

ஆனால், நாட்டின் முதல் கொள்கையை இன்று காங்கிரஸ் கட்சி மறந்துவிட்டது துரதிர்ஷ்டம். பார்வையற்றவர்களாக மாறி, தேச பக்திக்கும், தீவிரவாதத்துக்கும் வேறுபாட்டை அறிய முடியாமல் இருக்கிறார்கள். அதனால்தான் ஆர்எஸ்எஸ் அமைப்பையும், தலிபான்களையும் ஒப்பிட முயல்கிறார்கள்.

பாஜக திருப்திப்படுத்தும் அரசியல் செய்யாது. எங்கள் மந்திரம் என்பது வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பதும், இந்துத்துவாவிற்கு உண்மையாக நடப்பதும் ஆகும்''.

இவ்வாறு சி.டி.ரவி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x