Last Updated : 01 Sep, 2021 08:50 AM

3  

Published : 01 Sep 2021 08:50 AM
Last Updated : 01 Sep 2021 08:50 AM

ஆதாரமில்லா வகையில் தேசிய கட்சிகளுக்கு ரூ.3,370 கோடி நிதி : பாஜகவுக்கு ரூ,2,642 கோடி: ஏடிஆர் தகவல்

கோப்புப்படம்

புதுடெல்லி


கடந்த 2019-20ம் நிதியாண்டில் அறியப்படாத, ஆதாரங்கள் இல்லாத வகையில் ரூ.3ஆயிரத்து 377.41 கோடி நிதியை தேசியக் கட்சிகள் பெற்றுள்ளன. தேசிய கட்சிகள் பெற்ற நிதியில் 70 சதவீதம் அறியப்படாத வகையில் வந்துள்ளது என்று ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பு(ஏடிஆர்)தகவல் தெரிவி்த்துள்ளது.

ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பு(ஏடிஆர்) வெளியி்ட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த 2019-20ம் நிதியாண்டில் தேசியக் கட்சிகள் சார்பில் திரட்டப்பட்ட நிதியில் ரூ3,370 கோடி அறியப்படாத, ஆதாரங்கள் இல்லாத வகையில் பெறப்பட்டுள்ளது. இந்த நிதியில் 88.63 சதவீதம் அதாவது ரூ.2,993.82 கோடி நிதி தேர்தல்நிதிப் பத்திரங்கள் வாயிலாகப் பெறப்பட்டுள்ளது. தேசியக் கட்சிகள் பெற்ற நிதியில் 70 சதவீதம் அறியப்படாத ஆதாரங்கள் வாயிலாகப் பெறப்பட்டுள்ளது.

இதில் பாஜக மட்டும் ரூ.2,642.63 நிதி அறியப்படாத ஆதாரங்கள் வாயிலாகப் பெற்றுள்ளது. அதாவது, தேசியக் கட்சிகள் பெற்ற ஒட்டுமொத்த அறியப்படாத நிதியில்(ரூ.3,377கோடி) 78.24 சதவீதம் பாஜக சார்பில் பெறப்பட்டுள்ளது.

தேசியக் கட்சிகளான காங்கிரஸ், என்சிபி, இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திரிணமூல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளி்ல் அதிகபட்ச நிதியைப் பெற்றது பாஜக மட்டும்தான்.

காங்கிரஸ் கட்சி சார்பில் ரூ.526 கோடி அறியப்படாத ஆதாரங்கள் வாயிலாக அதாவது 15.57 சதவீதம் பெற்றுள்ளது. கடந்த 2004-05 முதல் 2019-20ம் ஆண்டுவரை தேசியக் கட்சிகள் சார்பில் ரூ.14ஆயிரத்து 651.53 கோடி அறியப்படாத ஆதாரங்கள் வாயிலாக பெறப்பட்டுள்ளது.

நன்கொடை குறித்த விவரங்கள்படி, கடந்த 2019-20்ம் ஆண்டில் ரூ.20ஆயிரத்துக்கும் மேல் ரொக்கமாக ரூ.3.18 லட்சம் மட்டுமே தேசிக் கட்சிகள் நன்கொடையாகப் பெற்றுள்ளன.

2004 முதல் 2019ம் ஆண்டுவரை காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி இணைந்து சேல்ஆஃப் கூப்பன் என்ற அடிப்படையில் ரூ.4,096 கோடி வருமானம் பெற்றுள்ளன.

அறியப்படாத ஆதாரங்கள் என்பது, ரூ.20ஆயிரத்துக்கும் குறைவாக நிதி வழங்குவது, தேர்தல் நிதிப்பத்திரங்கள் மூலம் நிதி வழங்குவது, சேல் ஆஃப் கூப்பன் திட்டம், நிவாரன நிதி, இதர வருவாய், தன்னார்வ பங்களிப்பு, தேர்தல் கூட்டங்களில் பங்களிப்பு ஆகியவை அடங்கும். தன்னார்வமாக வந்து நிதி தருவோர் விவரங்களை வெளிப்படையாக அறிவிக்கத் தேவையில்லை.

ஏடிஆர் அமைப்பு அளித்துள்ள பரிந்துரையில், “அரசியல் கட்சிகள் அளிக்கும் நிதி ஆதாரங்கள், நன்கொடை விவரங்கள் குறித்த அறிக்கையை மத்திய தலைமை கணக்குத் தணிக்கை துறை, தேர்தல் ஆணையம் ஆய்வு செய்து ஒப்புதல் அளிக்க வேண்டும்.

அவ்வாறு ஆய்வு செய்யப்பட்டு, ஒப்புதல் பெறப்பட்டால்தான் நிதிபெறுவதில் வெளிப்படைத்தன்மை, நம்பகத்தன்மை அரசியல் கட்சிகளிடையே அதிகரிக்கும். அதுமட்டுமல்லாமல்தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அனைத்துத் தகவல்களையும் அரசியல் கட்சிகள் வழங்கிட வேண்டும்.

அவ்வாறு இருந்தால்தான் அரசியல் கட்சிகளையும், தேர்தலையும், ஜனநாயகத்தையும் வலுப்படுத்தும். தகவல் அறியும் உரிமைச் சட்டம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், அரசியல் கட்சிகள் தாங்கள் செலவு செய்யும் ஒவ்வொரு ரூபாய்க்கும் கணக்கு வைக்க வேண்டும் என பரிந்துரைத்துக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x