Published : 31 Aug 2021 09:53 PM
Last Updated : 31 Aug 2021 09:53 PM
டோக்கியோ பாராலிம்பிக்ஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ள தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு குடியரசுத் தலைவர், குடியரசு துணை தலைவர், பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்பட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தற்போது பாராலிம்பிக் போட்டிகள் நடந்து வருகிறது. இன்று நடந்த போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த நட்சத்திர வீரர் மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
பதக்க நாயகன் மாரியப்பன் தங்கவேலுவுக்கு பல்வேறு தரப்பிலிருந்து வாழ்த்துகளும், பாராட்டுக்களும் குவிந்த வண்ணம் உள்ளன.
இதுகுறித்து குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், நமது பாராலிம்பிக் வீரர்கள் தொடர்ந்து நம்மை பெருமையடைய செய்து கொண்டிருக்கிறார்கள்! பாராலிம்பிக் உயரும் தாண்டுதலில் முறையே வெள்ளி மற்றும் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு மற்றும் சரத் குமாரின் வெற்றியை கண்டு இந்தியா மகிழ்ச்சியடைகிறது. உங்கள் உறுதியும், விடாமுயற்சியும் அனைவருக்கும் ஊக்கமளிக்கிறது. வாழ்த்துகள், என்று பாராட்டியுள்ளார்.
குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில்,"டோக்கியோ பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் பிரிவில் வெள்ளி வென்ற மாரியப்பன் தங்கவேலு மற்றும் வெண்கலம் வென்ற சரத் குமாருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். அவர்களது சாதனைகளை கண்டு ஒட்டுமொத்த நாடும் பெருமையடைகிறது. அவர்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு வாழ்த்துகள்" என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், “உயரே, உயரே எழும்புகிறீர்கள்! தொடர்சியான, சிறப்பான செயல்திறனுக்கு எடுத்துக்காட்டாக மாரியப்பன் தங்கவேலு திகழ்கிறார். வெள்ளிப் பதக்கம் வென்றதற்காக அவருக்கு வாழ்த்துகள். அவரது சாதனையைக் கண்டு இந்தியா பெருமையடைகிறது" என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூர் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், "இந்தியாவுக்காக வெள்ளியை வென்றுள்ளார் மாரியப்பன். பாராலிம்பிக்கில் அவர் தொடர்ந்து வெல்லும் 2-வது பதக்கம் இது, பல வழிகளில் வரலாற்று சிறப்புமிக்கது! நன்றாக விளையாடினீர் வீரரே" என்று வாழ்த்தியுள்ளார்.
மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை இணை அமைச்சர் எல். முருகன் ட்விட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "பதக்க நாயகனுக்கு வாழ்த்துகள்!தொடர்ந்து இரண்டாவது முறையாக பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் பெற்று தந்த தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு, இன்னும் பல்வேறு உயரங்களை அடைய மனமார வாழ்த்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT