Published : 31 Aug 2021 02:55 PM
Last Updated : 31 Aug 2021 02:55 PM
உத்தரப்பிரதேசத்தின் மதுரா மற்றும் அதனை சுற்றியுள்ள தெய்வீக நகரங்களான ஏழு ஊர்களில் மது, மாமிசம் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கானப் புதிய உத்தரவை அம்மாநில பாஜகவின் முதல்வர் யோகி ஆதித்யநாத் பிறப்பித்துள்ளார்.
நேற்று முடிந்த கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாட முதல்வர் யோகி மதுரா வந்திருந்தார். அங்கு ஸ்ரீகிருஷ்ணர் பிறந்ததாகக் கருதப்படும் ஜென்மபூமியின் கோயிலில் வழிபட்டார்.
பிறகு அங்குள்ள ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் கலந்து கொண்டார். அப்போது நிகழ்ச்சியில் பேசியவர் மதுராவில் இனி மது, மாமிசம் விற்பனைக்கு தடை விதிப்பதாக அறிவித்தார்.
இது குறித்து முதல்வர் யோகி பேசுகையில், ‘‘கடந்த 2017 இல் இங்குள்ள பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பிருந்தாவன் மற்றும் மதுரா மாநகராட்சிகள் இணைக்கப்பட்டன.
இதையடுத்து, இங்குள்ள ஏழு தெய்வீகத்தலங்கள் புனிதத்தலங்களாகவும் அறிவிக்கப்பட்டன. இப்போது அந்த ஏழு தலங்களிலும் மது, மாமிசம் விற்பனைக்கு தடை விதிக்க பொதுமக்கள் கோரி வருகின்றனர்.
இந்த கோரிக்கை ஏற்கப்பட்டு அதன் விற்பனைக்கு இந்த ஏழு ஊர்களிலும் தடை விதிக்கப்படுகிறது. இனி இவ்விரண்டையும் இந்த ஏழு ஊர்களிலும் விற்பனை செயவர்கள் மீது நகர நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.’’ எனத் தெரிவித்தார்.
இந்த ஏழு ஊர்களின் பட்டியலில் மதுரா மாவட்டத்தின் மதுரா, பிருந்தாவன், கோவர்தன், நந்த்காவ்ன், பர்ஸானா, கோலம், மாஹாவன் மற்றும் பல்தேவ் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
இவ்விரண்டின் விற்பனைகளை அங்கு இதுவரை செய்து வந்தவர்களுக்கு மறுவாழ்வு திட்டத்தின் கீழ் வேறு வருமானத்திற்கு வகை செய்யப்படும் எனவும் முதல்வர் யோகி தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன் உ.பி.யில் முதல்வராக இருந்த எவரும் கிருஷ்ண ஜெயந்தியின் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள மதுரா வந்ததில்லை. இதை சுட்டிக் காட்டிய முதல்வர் யோகி, மதுராவில் முன்பு போல் அனைத்து நிகழ்ச்சிகளும் தடையின்றி நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT