Last Updated : 27 Aug, 2021 03:11 AM

 

Published : 27 Aug 2021 03:11 AM
Last Updated : 27 Aug 2021 03:11 AM

மத்தியபிரதேச போலீஸாருக்கு தினந்தோறும் 4 வாழைப்பழம்

புதுடெல்லி

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரின் 1,500 போலீஸாருக்கு காலை, மாலை வேளைகளில் 2 வாழைப் பழங்கள் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது போலீஸாரின் உடல்நலத்தை காக்கும் முயற்சியாகக் கருதப்படுகிறது.

பாஜக ஆளும் மாநிலமான ம.பி.யில் உள்ளது இந்தூர் நகரம். இதன் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள காவல் நிலையங்களில் சுமார் 1,500 போலீஸார் பணியாற்றி வருகின்றனர். இவர்களின் ஊட்டச் சத்தாக அன்றாடம்காலை, மாலை தலா 2 வாழைப்பழங்கள் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்த சுற்றறிக்கையை இந்தூரின் மேற்குப் பகுதி மாவட்ட எஸ்.பி. மஹேஷ் சந்திர ஜெயின் அனுப்பி உள்ளார்.

இதுகுறித்து எஸ்.பி. மஹேஷ் சந்திர ஜெயின் கூறும்போது, ‘‘கடுமையான பணிச்சுமை காரணமாக போலீஸார் பலருக்கு காலை உணவு அருந்தவும் நேரம் கிடைப்பதில்லை. இதை சமாளிக்க அவர்களுக்கு சோதனை முறையில் வாழைப் பழங்கள் அளிக்கும் திட்டம் அமலாகி உள்ளது. இதன் பலனை பொறுத்து மற்ற காவல் நிலையங்களுக்கும் விரிவுப்படுத்தப்படும்’’ என்றார்.

வாழைப் பழங்கள் திட்ட அறிவிப்புக்கு பிறகு அவற்றை இலவசமாக அளிக்க இந்தூரின் பல்வேறு சமூக அமைப்புகள் முன்வந்துள்ளன. இவர்களிடம் தேவையை பொறுத்து அவர்களது சேவை பயன்படுத்திக் கொள்ளப்படும் என்றும் எஸ்.பி ஜெயின் தெரிவித்துள்ளார். வாழைப்பழம் அளிக்கும் முறையை ம.பி. மாநிலத்தின் சில காவல் நிலையங்கள் சில மாதங்களுக்கு முன்பே அறிமுகப்படுத்தி உள்ளன.

இது ஒரு நல்ல திட்டமாகவும் போலீஸாருக்கு பலன் அளிப்பதாகவும் இருப்பதால் முதல் முறையாக அந்தத் திட்டம் பெரிய அளவில் அமலாக்கப்பட்டுள்ளது. ம.பி.யில் சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இத்திட்டம் மாநிலம் முழுவதும் நீட்டிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x