Published : 26 Aug 2021 03:38 PM
Last Updated : 26 Aug 2021 03:38 PM
தலிபான்கள் பிடியில் சிக்கியிருக்கும் ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியர்களை மீட்பதற்குத்தான் உயர்ந்தபட்ச முன்னுரிமை வழங்கப்படும் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆப்கனில் நேட்டோ, அமெரிக்கப் படைகள் வெளிேயறத் தொடங்கியபின் தலிபான் தீவிரவாதிகள் ஆப்கனின் பல மாகாணங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். காபூல் நகரில் நுழைந்தவுடன் அதிபர் அஷ்ரப் கனி நாட்டைவிட்டு தப்பி, ஐக்கிய அரபு அமீரகம் சென்றுவிட்டார்.
அதிபர் மாளிகையைக் கைப்பற்றிய தலிபான்கள் ஆப்கனில் விரைவில் தலிபான்கள் ஆட்சி நடக்கும் என அறிவித்துள்ளனர். இதனால், ஆப்கனில் அடுத்து என்ன நடக்கும் என உலக நாடுகள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.
நிலையற்ற சூழல் ஆப்கனில் நிலவுவதால், தலிபான்களின் கடந்தகால கொடூரமான ஆட்சிக்கு அஞ்சி நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். காபூல் விமான நிலையத்துக்கு வரும் எந்த விமானத்திலாவது ஏறி, நாட்டை விட்டுச் செல்லும் மனநிலையில், அச்சத்தோடும் பீதியோடும் உள்ளனர்.
இதற்கிடையே ஆப்கனில் சிக்கியிருக்கும் பல்வேறு நாட்டு மக்களை அந்தந்தநாடுகள் விமானம் மூலம் வெளிேயற்றி வருகின்றனர். ஆப்கனில் தங்கியுள்ள இந்தியர்கள் மட்டுமின்றி, சீக்கியர்கள், இந்துக்களையும் மத்திய அரசு பாதுகாப்பாக வெளியேற்றி வருகிறது. கடைசியாக ஞாயிற்றுக்கிழமை 160க்கும் மேற்பட்ட இந்தியர்களை விமானப்படை விமானம் மூலம் மத்திய அரசு மீட்டது.
இந்நிலையில் ஆப்கனில் உள்ள இந்தியர்களை பாதுகாப்பாக மீட்பது, அங்குள்ள இந்தியர்கள் நிலை ஆகியவை குறித்து ஆலோசிக்க அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று நடத்தப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, திமுக சார்பில் டிஆர் பாலு, என்சிபி கட்சித் தலைவர் சரத் பவார், அப்னா தளம் கட்சி சார்பில் அனுப் பிரியா, ஹெச்டி தேவேகவுடா, உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். மத்திய அ ரசு சார்பில் மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் அளித்த விளக்கம் குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில் “ ஆப்கானிஸ்தானில் சிக்கியிருக்கும் இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க அனைத்துப் பணிகளையும் மத்திய அரசுஎடுத்து வருகிறது. ஆப்கனில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்பதற்குதான் அதிகபட்ச முன்னுரிமை வழங்கப்படும்.
ஆப்கனில் தற்போது சூழல் மிகவும் சிக்கலாக மாறியுள்ளது. தோஹா ஒப்பந்தத்தை மீறியும், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியும் தலிபான்கள் செயல்படுகிறார்கள். தோஹா ஒப்பந்தம் என்பது தலிபான்களுக்கும், அமெரிக்கப் படைகளுக்கும் கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்தது. இதன்படி மத, ஜனநாயக சுதந்திரம் வழங்குவதும், காபூலில் அனைத்து சமூகத்தின் பிரிவுகளின் பிரதிநிதிகள் அடங்கிய அரசை நிறுவும் வகையிலான ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தத்தை மீறிவிட்டனர்
இதுவரை ஆப்கனிலிருந்து இந்தியத் தூதரகத்தைச் சேர்ந்த 175 பேர், 263 இந்தியர்கள், இந்துக்கள், சீக்கியர்கள் அடங்கிய ஆப்கன் நாட்டைச் சேர்ந்த 112 பேர், 3-ம் நாட்டைச் சேர்ந்த 15 பேர் என 565 பேர் இதுவரை ஆப்கனிலிருந்து இந்தியப் படையால் மீட்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு மத்திய அரசு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நிருபர்களுக்கு அளித்தபேட்டியில் கூறுகையில் “ ஆப்கனிலிருந்து இந்தியர்கள் அனைவரையும் முழுமையாக விரைவில் வெளியேற்ற அரசு உறுதிபூண்டுள்ளது. இது தொடர்பாக ஏதாவது சர்வதேச அளவில் முடிவுகள் ஏதும் எடுக்கப்பட்டால், அதில் இந்தியாவின் பங்கு அங்கீகரி்க்கப்படும்.
அடுத்துவரும் நாட்களில் இதுபோன்று பல கூட்டங்கள் நடத்தப்பட்டு நிலவரம் தெரிவிக்கப்படும். ஆப்ரேஷன் தேவி சக்தி மூலம் 6 விமானங்கள் ஈடுபட்டுள்ளன. பெரும்பாலான இந்தியர்களை அழைத்துவிட்டோம், சிலருக்கு விமானம் கிடைக்கவில்லை. ஒவ்வொருவரையும் தாயகத்துக்கு பாதுகாப்பாக அழைத்துவர முயற்சிப்போம். ஆப்கன் மக்கள் சிலரையும் மீட்டுள்ளோம். இதுதொடர்பாக அனைத்து தகவல்களையும் எதிர்க்கட்சித் தலைவர்களிடம் விரிவாகத் தெரிவிக்கப்பட்டது” எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT