Last Updated : 26 Aug, 2021 11:33 AM

17  

Published : 26 Aug 2021 11:33 AM
Last Updated : 26 Aug 2021 11:33 AM

கல்யாண்சிங் மறைவிற்கு அனுதாபம்; அலிகர் முஸ்லிம் பல்கலைகழக துணைவேந்தருக்கு கண்டனம்

புதுடெல்லி

உத்தரப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் கல்யாண்சிங் மறைவிற்கு அலிகர் முஸ்லிம் பல்கலைழக துணைவேந்தர் அனுதாபம் தெரிவித்திருந்தார். இதற்கு அதன் மாணவர்கள் உள்ளிட்டோரிடமிருந்து கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தானின் முன்னாள் ஆளுநராக இருந்தவர் கல்யாண்சிங். பாஜகவின் மூத்த தலைவரான இவர், கடந்த 21 இல் உடல்நலக் குறைவால் காலமானார்.

இவரது மறைவிற்கு அலிகர் முஸ்லிம் பல்கலைகழகத்தின் துணைவேந்தரான பேராசிரியர் தாரீக் மன்சூர் அனுதாபம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். இதற்கு கல்யாண்சிங் அலிகர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது காரணமாகக் கருதப்பட்டது.

தம் அறிக்கையில் பேராசிரியர் தாரீக், தனது பொது வாழ்க்கையில் முக்கிய அங்கம் வகித்த கல்யாண்சிங், உ.பி. முதல்வராக இருந்து அதன் வளர்ச்சிக்கு பாடுப்பட்டவர் எனக் தெரிவித்திருந்தார்.

கல்யாண்சிங்கின் ஆத்மா சாந்திடையவும், அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கு சக்தி அளிக்க எல்லாம் வல்ல அல்லாவிடம் வேண்டுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு அதன் மாணவர்கள் உள்ளிட்டோரிடம் கடும் கண்டனம் கிளம்பியுள்ளது. கரோனா பரவலால் தற்போது வகுப்புகள் நடைபெறவில்லை என்பதால் வளாகத்தில் மாணவர்கள் இல்லை.

எனினும், வெளியில் தங்கியிருந்த அதன் மாணவர்கள் வளாகத்தில் கண்டன நோட்டீஸுகள் ஒட்டியிருந்தனர். ஆங்கிலம், இந்தி மற்றும் உருது என மூன்று மொழிகளில் அந்த நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது.

இதில், டிசம்பர் 6, 1992 இல் பாபர் மசூதியை உடைத்த கிரிமினல் குற்றவாளியான கல்யாண்சிங் மறைவிற்கு தம் துணைவேந்தர் அனுதாபம் தெரிவித்தது தவறு எனக் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நோட்டீஸுகள் நிர்வாகத்தினரால் கிழிந்து எறியப்பட்டிருந்தது. இதேபோல், அலிகர் பல்கலையின் முன்னாள் மாணவர்கள் பலரும் சமூகவலைதளங்களில் தம் விமர்சனங்களை பதிவு செய்துள்ளனர்.

அதில், பேராசிரியர் தாரீக் வேண்டுமானால் தனிப்பட்ட முறையில் தன் அனுதாபத்தை தெரிவித்திருக்கலாம் எனவும், பாபர் மசூதி உடைக்கக் காரணமானவருக்கு ஒரு முஸ்லிம் பல்கலை சார்பில் அதை அளித்தது தவறு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அஞ்சலி செலுத்தாத சமாஜ்வாதி, காங்கிரஸ்

இதனிடையே, லக்னோவில் வைக்கப்பட்டிருந்த கல்யாண்சிங் உடலுக்கு, முன்னாள் முதல்வர்களான சமாஜ்வாதி கட்சியின் முலாயம்சிங் மற்றும் அவரது மகன் அகிலேஷ்சிங் அஞ்சலி தெரிவிக்கவில்லை.

காங்கிரஸின் முக்கியத் தலைவர்கள் பலரும் கூட அஞ்சலி தெரிவிக்கவில்லை. இதற்கு பாஜகவினர் இடையே கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

உ.பி.யில் 2022 இல் வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் முஸ்லிம்கள் வாக்குகள் பெற அஞ்சலி அவர்கள் செலுத்தவில்லை எனவும் பாஜகவினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

பாஜகவின் வாக்குவங்கி அரசியல்

இந்நிலையில், பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவரான கல்யாண்சிங் பெயரை அயோத்தியின் முக்கிய சாலைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

இவரது துணை முதல்வரான கேசவ், உ.பி.யின் பல்வேறு மாவட்டங்களிலும் கல்யாண்சிங் பெயர் வைக்கப்படும் என தெரிவித்துள்ளார். இதற்கு எதிர்க்கட்சியினர் 2022 சட்டப்பேரவை தேர்தலுக்காக பாஜக செய்யும் பிற்படுத்தப்பட்டோர் வாக்கு வங்கி அரசியல் என விமர்சித்து உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x