Published : 25 Aug 2021 08:34 PM
Last Updated : 25 Aug 2021 08:34 PM
செப்டம்பர் 5 ஆம் தேதி, ஆசிரியர்கள் தினத்துக்குள் அனைத்து ஆசிரியர்களுக்கும் கரோனா தடுப்பூசியை செலுத்துமாறு மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி ஆசிரியர் தினத்துக்கு முன்னதாக பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்துமாறு அனைத்து மாநிலங்களையும் கேட்டுக்கொண்டுள்ளோம். இதற்காக அனைத்து மாநிலங்களுக்கும் கூடுதலாக 2 கோடி கரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று பதிவிட்டுள்ளார்.
செப்டம்பர் மாதத்தில் பல்வேறு மாநிலங்களும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளைத் திறக்க முடிவு செய்துள்ளது. குஜராத் மாநிலத்தில் சுழற்சி முறையில் 6ஆம் வகுப்பு முதலே பள்ளிகளைத் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கரோனா பெருந்தொற்றால் இந்தியா முழுவதும் 3.2 கோடி பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகையால், ஆசிரியர்கள், கல்வி நிலைய ஊழியர்கள், 12 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு தடுப்பூசித் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்க வலுத்துவருகிறது.
இந்தியாவில் இதுவரை 58 கோடி பேருக்குக் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதிகரிக்கும் கரோனா:
நாடு முழுவதும் அன்றாட கரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 37,593 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தொற்று மேலும் அதிகரித்துள்ளது. ஒரே நாளில் கூடுதலாக 12 ஆயிரம் பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் நேற்றைய ஒரு நாள் பாதிப்பு 37,593 அதிகரித்துள்ளது.
குறிப்பாக, கேரளவில் ஒரே நாளில் 31,445 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மாநிலத்தில் ஓணம் பண்டிகையை ஒட்டி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அங்கே இன்று ஒரே நாளில் 31,445 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT