Published : 25 Aug 2021 01:19 PM
Last Updated : 25 Aug 2021 01:19 PM
கேரளாவில் தினசரி கரோனா தொற்று 24 ஆயிரத்துக்கும் அதிகமாக உயர்ந்துள்ள நிலையில் அடுத்த நான்கு வாரங்கள் மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.
கேரளாவில் சில நாட்களாக கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனையடுத்து அங்கு மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. கேரளாவில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் அங்கிருந்து மக்கள் அண்டை மாநிலங்களான தமிழகம் மற்றும் கர்நாடகாவுக்கு செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கேரளாவில் கரோனாவை கட்டுப்படுத்த மத்திய குழு அங்கு சென்று ஆய்வு நடத்தியது. கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என கேரள அரசுக்கு மத்திய குழு பரிந்துரைத்துள்ளது.
கேரளாவில் கோவிட் பரவலைக் கட்டுப்படுத்த வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
அதன்படி கடந்த ஞாயிற்றுக் கிழமை ஊரடங்கில் விலக்கு அளிக்கப்பட்டது. இந்நிலையில் கேரளாவில் மீண்டும் கரோனா பாதிப்பு அதிகரித்து உள்ளது. அங்கு நேற்று ஒரே நாளில் 24,296 பேர் புதிதாக தொற்று பாதிப்புக்கு உள்ளாகினர். நோய் பாதித்த 173 பேர் மரணம் அடைந்தனர். மாநிலம் முழுவதும் பாதிக்கப்படுவோர் சதவிகிதம் 18.04 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக நாடுமுழுவதும் 37,593 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் அதில் கேரளாவில் மட்டும் 24,296 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து மீண்டும் தீவிர கட்டுப்பாடுகளை விதிக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்த கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில் ‘‘கோவிட் 3வது அலை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர். எனவே ஞாயிற்று கிழமை மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுகிறது. பொதுமக்கள் இதைக் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்’’ என்றார்.
இதுகுறித்து சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியதாவது:
பொதுமக்களையும், அவர்களின் உயிரையும் காக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. மற்றொரு லாக்டவுன் அமல்படுத்துவது சாத்தியமல்ல. ஓணம் விடுமுறைக்கு பிறகு நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்கள் திறப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, அடுத்த நான்கு வாரங்களில் மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
வரவிருக்கும் மூன்றாம் அலை கோவிட் அச்சுறுத்தலை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். மூன்றாவது அலையை கருத்தில் கொண்டு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுகள் அமைக்க சுகாதாரத்துறை ஏற்கெனவே ஏற்பாடுகள் செய்துள்ளது.
வென்டிலேட்டர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மாவட்ட மருத்துவமனையில் உள்ள ஐசியூக்களை மருத்துவக் கல்லூரிகளுடன் ஆன்லைனில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநிலத்திலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT