Published : 25 Aug 2021 08:17 AM
Last Updated : 25 Aug 2021 08:17 AM
இந்தியாவில் கரோனா 'எண்டமிக்' நிலையை எட்டி வருவதாக உலக சுகாதார மையத்தின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சவுமியா சுவாமிநாதன் கூறியுள்ளார்.
கரோனா பரவத் தொடங்கியதிலிருந்தே நம் அனைவருக்கும் 'பேண்டமிக்' என்ற வார்த்தை பிரபலமாக இருக்கிறது. இந்தப் பதத்துக்குப் பெருந்தொற்று என்று அர்த்தம். அதாவது உலகம் முழுவதும் வியாபித்திருக்கும் தொற்று. ஆனால், தற்போது அன்றாடத் தொற்று எண்ணிக்கை 25,000 என்று இருக்கும் நிலையில் இந்தியாவில் கரோனா பாதிப்பு ஒருவித 'எண்டமிக்' நிலையை எட்டி வருவதாக உலக சுகாதார மையத்தின் விஞ்ஞானி டாக்டர் சவுமியா சுவாமிநாதன் கூறியிருக்கிறார்.
அது என்ன எண்டமிக் நிலை?
இந்தியாவைப் போன்ற பரப்பளவில் பெரிய நாட்டில், அதிக மக்கள்தொகை கொண்ட நாட்டில், அதுவும் ஒவ்வொரு பகுதியில் உள்ள மக்களின் இயல்பான நோய் எதிர்ப்பு சக்தித் திறனிலும் பெரிய அளவில் வித்தியாசப்படும் நாட்டில் கரோனா தொற்று இனி எப்போதும் இதுபோலவே சிற்சில ஏற்ற இறக்கங்களை மட்டுமே கண்டுவிட்டு நிரந்தரமாக இருக்கும் சூழலை எண்டமிக் எனக் கூறலாம். எந்தப் பகுதியில் எல்லாம் முதல் இரண்டு அலைகளில் பெரிய பாதிப்பு ஏற்படவில்லையோ அல்லது எங்கெல்லாம் தடுப்பூசி விநியோகத்தில் குறைபாடு இருக்கிறதோ அங்கெல்லாம் மூன்றாவது அலை ஏற்பட்டால் தாக்கம் சற்று அதிகமாக இருக்கலாம்.
எப்படி இருந்தாலும் 2022க்குள், உலகில் 70% மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கும். அப்போது நாடு முழுவதும் இயல்பு நிலைக்குத் திரும்பும் சூழல் ஏற்படும் என்று கூறினார்.
குழந்தைகளைத் தாக்குமா 3-வது அலை?
உலகம் முழுவதும் இருந்து கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில் பார்க்கும்போது கரோனாவால் குழந்தைகளுக்கு மிகக் குறைந்த அளவு பாதிப்பே ஏற்படுகிறது. மிகக் குறைந்த அளவிலான குழந்தைகளுக்கே மருத்துவமனையில் சிகிச்சை தேவைப்படுகிறது. அதிலும் குறைவான அளவிலான குழந்தைகள்தான் உயிரிழக்கின்றனர். இருப்பினும், குழந்தைகளுக்கான கரோனா சிறப்பு சிகிச்சை வார்டுகளைத் தயார் நிலையில் வைத்திருப்பது என்பது மிகவும் அவசியமானது. ஆனால், ஆயிரக்கணக்கில் குழந்தைகள் ஐசியுக்களில் அனுமதிக்கப்படுவார்களோ என்றெல்லாம் அச்சப்படத் தேவையில்லை.
கோவாக்சினுக்கு அனுமதி எப்போது?
கோவாக்சினுக்கு அனுமதி அளிப்பதில் மட்டுமே காலதாமதம் செய்யப்படுவதாக பரவலாக ஒரு பேச்சு இருக்கிறது. அது அப்படியல்ல, பாரத் பயோடெக் நிறுவனம் முதற்கட்டத் தகவல்களை ஜூலை மூன்றாவது வாரத்தில் அளித்தது. அதன் பின்னர் மேம்படுத்தப்பட்ட தகவல்கள் கொண்ட ஆவணங்கள் ஆகஸ்ட் 3-வது வாரத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. ஆகையால் செப்டம்பர் இறுதிக்குள் எப்படியும் கோவாக்சினுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்கும். எல்லா நிறுவனங்களுமே குறைந்தது 4 முதல் அதிகபட்சமாக 8 வாரங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.
மூன்றாவது அலை வருமா?
மூன்றாவது அலை வருமா என்பதைக் கணிப்பதில் தெளிவான அடிப்படைத் தகவல்கள் இல்லை. மூன்றாவது அலை வரலாம், ஒருவேளை அது முந்தைய அலை போல் தாக்கத்தை ஏற்படுத்தாமல் செல்லலாம். இருந்தாலும் மக்கள் எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அதேபோல், அறிவியல் ரீதியாகவும், தார்மீக பொறுப்பு அடிப்படையிலும் பார்த்தால் பூஸ்டர் தடுப்பூசிகளுக்காகப் பரபரப்பாக இயங்க வேண்டாம் என்றே நான் உலக நாடுகளை வலியுறுத்துவேன்.
இவ்வாறு சவுமியா சுவாமிநாதன் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT