Published : 24 Aug 2021 12:21 PM
Last Updated : 24 Aug 2021 12:21 PM
சுதந்திர தின உரையின் போது, நாட்டின் எத்தனையாவது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடுகிறோம் என தெரியாத முதல்வர் உத்தவ் தாக்கரேவை, அங்கிருந்திருந்தால் அறைந்திருப்பேன் எனக்கூறிய மத்திய அமைச்சர் நாராயண் ரானே மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் மக்கள் ஆசி யாத்திரை' நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நாராயண் ரானே கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
நாடு சுதந்திரம் அடைந்து எத்தனை ஆண்டுகள் ஆகின்றன என்ற விவரம் கூட மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு தெரியவில்லை. சுதந்திர தின உரையின் போது, எத்தனையாவது ஆண்டு சுதந்திர தினம் என்பதை முதல்வர் மறந்துவிட்டார். உரையின் பாதியில், தனது உதவியாளரிடம் அதனை கேட்டு தெரிந்து கொண்டார்.
இது அவமானமாக உள்ளது. சுதந்திர தின உரையின்போது அவருக்கு எத்தனையாவது ஆண்டை கொண்டாடுகிறோம் என்பதை தெரிந்து கொள்ள உதவியை நாடிய வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த இடத்தில் நான் இருந்திருந்தால் அவரை அறைந்திருப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனைத் தொடர்ந்து மும்பை உட்பட மகாராஷ்டிராவின் பல பகுதிகளில் நாராயண் ரானேவை கண்டித்து சிவசேனா தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாஜகவினருக்கும், சிவசேனா தொண்டர்களுக்கும் மோதல் ஏற்பட்டது.
சிவசேனா மற்றும் பாஜக தொண்டர்கள் மும்பையில் மோதிக் கொண்டனர். ‘‘இந்தியா சுதந்திரம் பெற்ற ஆண்டை அறியாததற்காக முதல்வர் உத்தவ் தாக்கரேவை அறைவேன்’’ எனக் கூறிய மத்திய அமைச்சர் நாராயண் ரானேவுக்கு எதிராக சிவசேனா நிர்வாகிகள் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர்.
நாசிக் காவல்நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது மத்திய அமைச்சரை கைது செய்யவும் காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT