Published : 24 Aug 2021 07:53 AM
Last Updated : 24 Aug 2021 07:53 AM
காஷ்மீர் மாநிலத்தில் சினிமா பாணியில் நடந்த அண்டர்கவர் ஆபரேஷனில் லஷ்கர் தீவிரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் கமாண்டர் அப்பாஸ் ஷேக். இவர் நீண்டநாளாக தேடப்பட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று அலோச்சி பாக் பகுதியில் அவரையும் அவரது கூட்டாளிகளும் சேர்ந்து லாவகமாக சுட்டுக் கொன்றனர். மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் நடந்த இந்த அண்டர்கவர் ஆபரேஷன் சினிமாவை விஞ்சும் அளவுக்கு பரபரப்பாக இருந்தது.
ஷேக் அப்பாஸும் அவரது கூட்டாளி ஷாகிப் மன்சூரும், அலோச்சி பாக் பகுதியில் இருப்பது தொடர்பாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே அங்கு ஸ்ரீநகர் காவல்துறையினர் சாதாரண உடையில் குவிந்தனர். காஷ்மீர் காவல்துறை ஐஜி விஜய்குமார் வழிகாட்டுதலின்படி அண்டர்கவர் ஆபரேஷன் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஷேக் மற்றும் மன்சூரை சுற்றிவளைத்தப் போலீஸார் அவர்கள் என்ன நடக்கிறது எனக் கணிப்பதற்குள் குறிவைத்து சுட்டு வீழ்த்தினர்.
இந்த இருவரும் ஸ்ரீநகர் இளைஞர்களை மூளைச் சலவை செய்து தீவிரவாதிகளாக மாற்றி வந்தனர். இதுதவிர இவர்கள் பல்வேறு தீவிரவாத வன்முறைச் சம்பவங்களிலும் தொடர்பில் இருந்துள்ளனர். 46 வயதான ஷேக் ஆரம்பத்தில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பில் இருந்துள்ளார். பின்னர் அங்கிருந்து விலகி லஷ்கர் இ தொய்பா அமைப்பில் இணைத்துக் கொண்டார். மன்சூர் முதுநிலை பட்டதாரி. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகத் தான் இவர் தி ரெஸிஸ்டன்ஸ் ஃபோர்ஸ் என்ற பெயரில் இயங்கும் ராணுவம், காவல்துறையை எதிர்த்து செயல்படும் தீவிரவாத குழுக்களின் அங்கத்தில் இணைந்தார்.
இவர்களில் ஷேக் அப்பாஸ் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த நிலையில், அண்டர்கவர் ஆபரேஷனில் நேர்த்தியாக சுட்டு வீழ்த்தப்பட்டது காவல்துறையினருக்கு பாராட்டுதல்களைப் பெற்றுத் தந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT