Published : 21 Aug 2021 07:17 PM
Last Updated : 21 Aug 2021 07:17 PM

கரோனா 3-வது டோஸ் தடுப்பூசி; அடுத்த ஆண்டு முடிவு செய்யப்படும்: எய்ம்ஸ்

புதுடெல்லி

மூன்றாவது கோவிட் -19 தடுப்பூசியின் தேவை குறித்து இந்தியாவிடம் இப்போது போதுமான தரவு இல்லை என எய்ம்ஸ் இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் கரோனா முதல் அலையின் போது மிகப் பெரிய அளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டது. அன்றாடம் ஒரு லட்சம் பேருக்கும் குறையாமல் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இரண்டாவது அலையின் போது ஃபைஸர், மாடர்னா தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டதால் சற்றே பாதிப்பு தாக்குப்பிடிக்கும் அளவுக்கு இருந்தது.

இந்நிலையில், மூன்றாவது அலை அங்கே வேகமெடுக்கத் தொடங்கியிருக்கிறது. பெரும்பாலானோருக்கு டெல்டா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால், மக்களுக்கு மூன்றாவதாக கரோனா பூஸ்டர் டோஸ் போட அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளது. இதுபோலவே ஐரோப்பிய நாடுகளும் பூஸ்டர் டோஸ் போட அனுமதி வழங்கியுள்ளன.

பூஸ்டர் டோஸ்களுக்கான பரிந்துரைகள் எதிர்காலத்தில் வழங்கப்படும் என தேசிய நுண்கிருமி நிறுவனம் தரப்பில் கூறுகையில் ‘‘இந்தியாவிலும் மூன்றாவது டோஸ் தேவையான என்ற கேள்வி எழுந்துள்ளது. வெளிநாடுகளில் கோவிட் தொற்றுக்கு பூஸ்டர் டோஸ் வழங்குவது தொடர்பாக குறைந்தபட்சம் ஏழு வெவ்வேறு தடுப்பூசிகள் சோதனை செய்யப்பட்டு வருகின்றன.

ஆனால் அதிக வருவாய் மற்றும் குறைந்த வருவாய் பெறும் நாடுகளிடையே தடுப்பூசியில் அதிக அளவில் இடைவெளி ஏற்படும் காரணத்தால் உலக சுகாதார அமைப்பு இந்த முயற்சிகளை கைவிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. எனினும், எதிர்காலத்தில் பூஸ்டர் டோஸ்களுக்கான பரிந்துரைகள் நிச்சயம் முன்வைக்கப்படும்’’ எனத் தெரிவித்து இருந்தது.

இந்தநிலையில் கரோனா வைரஸுக்கு எதிரான பாதுகாப்பை அதிகரிக்க, பூஸ்டர் டோஸ் எனப்படும் மூன்றாவது கோவிட் -19 தடுப்பூசியின் தேவை குறித்து இந்தியாவிடம் இப்போது போதுமான தரவு இல்லை என எய்ம்ஸ் இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். அதேசமயம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கூடுதல் தகவல்கள் கிடைக்க வாய்ப்புள்ளது, அதன் பிறகே இதுபற்றி முடிவு செய்ய முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x