Published : 20 Aug 2021 05:37 PM
Last Updated : 20 Aug 2021 05:37 PM
பெகாசஸ், விவசாயிகள் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து காணொலி வாயிலாக 18 எதிர்க்கட்சித் தலைவர்களுடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று ஆலோசனை நடத்தினார்.
நாடாளுமன்ற மழைகாலக் கூட்டத் தொடரில் பெகாசஸ் ஒட்டுகேட்பு உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்பி இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் எழுப்பி அமளியில் ஈடுபட்டன. இதனால் இரு அவைகளும் முடங்கி போயின. அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட்டதால் மத்திய அரசால் ஒன்றும் செய்ய இயலவில்லை.
மழைக்காலக் கூட்டத்தொடர் முற்றிலும் வீணாகிப் போனதற்கு முழுக்க மத்திய அரசின் செயல்பாடுகளே காரணம். பெகாசஸ் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதித்து இருந்திருந்தால், அவை சூமாகமாக நடந்திருக்கும் . ஆனால், இந்த விஷயத்தில் எதிர்க்கட்சிகளைப் பேசவே மத்தியஅரசு அனுமதிக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு சிற்றுண்டி அளித்து கடந்த வாரத்தில் ஆலோசனை நடத்தினார். இதன் தொடர்ச்சியாக 18 எதிர்க்கட்சித் தலைவர்களுடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று ஆலோசனை நடத்தினார்.
காணொலி வாயிலாக நடக்கும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கேஜ்ரிவால் ஆகியோர் அழைக்கப்படவில்லை.
கடந்த 10 மாதங்களுக்கு மேலாக நடந்துவரும் விவசாயிகள் போராட்டம், வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுதல், 3-வது கரோனா அலையைக் கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்துவதை வேகப்படுத்துதல், பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்வதை கைவிடுதல், நாட்டின் பொருளாதார நிலைமை, அதிகரித்துவரும் வேலையின்மை, கரோனா பெருந்தொற்றால் வேலையிழந்த மக்களுக்கு நிதியுதவி வழங்குவது உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT