Published : 20 Aug 2021 05:15 PM
Last Updated : 20 Aug 2021 05:15 PM
கரோனா 2-வது அலையின்போது ஆக்சிஜன் பற்றாக்குறையால் கரோனா நோயாளிகள் யாரும் உயிரிழக்கவில்லை என்று மாநில அரசுகள் கூறுவதைத்தான் மத்திய அரசு விரும்புகிறது என்று டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா இன்று காணொலி வாயிலாக நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
''கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கரோனா 2-வது அலை ஏற்பட்டபோது, டெல்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறை எவ்வாறு இருந்தது, சிக்கித் தவித்தது என்பது அனைவருக்கும் தெரியும். ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என்று யாரும் மறுக்க முடியாது.
ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்தது குறித்து விசாரிக்க அரசியலமைப்புக் குழு உருவாக்குவது குறித்து மறுபடியும் கோப்புகளைத் தாக்கல் செய்துள்ளோம். மத்திய அரசு ஒரு புறம், ஆக்சிஜன் பற்றாக்குறையால் எத்தனை பேர் உயிரிழந்தார்கள் எனக் கேட்கிறது.
மறுபுறம், கரோனாவால் உயிரிழந்தவர்கள் ஆக்சிஜன் பற்றாக்குறையால்தான் உயிரிழந்தார்களா என்பது குறித்து விசாரிக்க அனுமதிக்க முடியாது என்று மத்திய அரசு தடுக்கிறது. அதுபோன்ற மரணங்களை விசாரிக்க அனுமதிக்க முடியாது என மத்திய அரசு கூறுகிறது. இப்படி இரு விதமாகப் பேசினால் எவ்வாறு மாநிலங்களால் பேசமுடியும்?
மத்திய அரசின் விருப்பம் என்பது, ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் உயிரிழக்கவில்லை என்று நாங்கள் எழுதித் தரவேண்டும். அவ்வாறு கூறினால் அது மிகப்பெரிய பொய்யாக அமையும்.
ஏப்ரல், மே மாதங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதற்கு மத்திய அரசின் தவறான நிர்வாகம்தான் காரணம். இது திட்டமிடப்பட்டு செய்யப்பட்டதா அல்லது தவறுதலாக நடந்ததா என்பது குறித்து விசாரிக்க வேண்டும். ஆக்சிஜன் பற்றாக்குறை பிரச்சினைக்கு தாங்களே காரணம் என்று மத்திய அரசு ஒப்புக்கொள்ள வேண்டும்''.
இவ்வாறு மணிஷ் சிசோடியா தெரிவித்தார்.
கடந்த வாரம் சிசோடியா, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்குக் கடிதம் எழுதியிருந்தார். அதில் கரோனா பரவல் காலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு நடந்ததா என்பது குறித்து விசாரிக்காமல் கூறுவது கடினம். வல்லுநர் குழுவை அமைத்து இதை விசாரிக்க வேண்டும். இதற்காக ஆளுநரிடம் ஒப்புதலை டெல்லி அரசு கேட்டுள்ளது எனத் தெரிவித்திருந்தார்.
இதற்கு முன் இதேபோன்று ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரேனும் உயிரிழந்தார்களா என்பது குறித்து விசாரிக்க 4 பேர் கொண்ட வல்லுநர்கள் குழுவை டெல்லி அரசு அமைத்தது. இந்தத் திட்டத்துக்கு ஆளுநர் அனுமதியளிக்கவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT