Published : 20 Aug 2021 11:20 AM
Last Updated : 20 Aug 2021 11:20 AM
மகாராஷ்டிரா மாநிலம், புனே நகரில் பிரதமர் மோடிக்கு மார்பளவு சிலை வைத்துக் கோயில் எழுப்பிய பாஜக தொண்டருக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்தச் சிலை அகற்றப்பட்டது.
மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா, என்சிபி கட்சியினரும் கடுமையாக எதிர்த்தனர். பாஜக தலைமையிலும் இந்தச் செயல் கண்டு அதிருப்தி அடைந்ததால், மோடியின் சிலை சில நாட்களில் அகற்றப்பட்டது.
புனே நகரைச் சேர்ந்த பாஜக நிர்வாகி மயூர் முன்டே. இவர் கடந்த சில நாட்களுக்கு முன், அனுத் பகுதியில் பிரதமர் மோடிக்கு மார்பளவு சிலை வைத்துக் கோயில் எழுப்பினார். அந்தக் கோயிலில் சென்று மயூர் முன்டே வழிபாடும் செய்யத் தொடங்கினார், இதைப் பார்த்த பாஜக தொண்டர்கள் பலரும் மோடியின் சிலையை வழிபடத் தொடங்கினர்.
மயூர் முன்டேயின் செயல்பாடுகள் பெரும் விமர்சனத்தை எதிர்க்கட்சிகள் தரப்பிலும், ஆளும் பாஜக தரப்பிலும் உருவாக்கியது. மாநிலத்தில் ஆளும் சிவசேனா, என்சிபி கட்சிகள் சிலையை அகற்றக் கோரி போராட்டம் நடத்தும் அளவுக்கு வந்துவிட்டன. இந்தச் செயல்பாடுகள் பாஜக டெல்லி தலைமை வரை சென்று கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். பாஜகவின் கொள்கைக்கு முரணாக மயூர் செயல்பட்டு வருகிறார் என்று மூத்த தலைவர்கள் அதிருப்தி அடைந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்து பாஜக நிர்வாகி மயூர் முன்டே நிருபர்களிடம் கூறுகையில், “அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு பிரதமர் மோடி முயற்சி எடுத்துள்ளார். அவரின் சேவைக்கு நன்றி செலுத்தவே இந்தக் கோயிலை எழுப்பினேன். பிரதமராக மோடி வந்தபின், மக்களுக்கான ஏராளமான வளர்ச்சித் திட்டங்களை உருவாக்கியுள்ளார். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்துள்ளார். முத்தலாக் ஒழிப்பு, ராமர் கோயில் கட்டுமானம் உள்ளிட்ட பல சாதனைகளைச் செய்துள்ளார்.
இந்தக் கோயில் கட்டுவதற்காக ராஜஸ்தானின் ஜெய்ப்பூரிலிருந்து சிவப்பு மார்பில் கற்களை வாங்கினேன். ஒட்டுமொத்தமாகக் கோயில் எழுப்ப ரூ.1.60 லட்சம் செலவானது” எனத் தெரிவித்தார்.
பிரதமர் மோடிக்குக் கோயில் எழுப்பப்பட்டதை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட என்சிபி, சிவசேனா தொண்டர்கள் நேற்று போராட்டம் நடத்தி, சிலையை அகற்றுமாறு கூறினர். சிலை வைத்த சம்பவத்தைக் கிண்டலாகவும் விமர்சித்தனர்.
புனே என்சிபி கட்சித் தலைவர் பிரசாந்த் ஜக்தப் கூறுகையில், “மோடிக்கு சிலை வைக்கப்பட்டதை அறிந்தோம். நாட்டில் சமையல் கேஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துவிட்டது. அவரிடம் பிரார்த்தனை செய்து எரிபொருள் விலையைக் குறைக்கக் கோரியும், அத்தியாவசியப் பொருட்கள் விலையைக் குறைக்கவும் பிரார்த்தனை செய்யவந்தோம்.
அதுமட்டுமல்லாமல் வேலையின்மை பிரச்சினையைத் தீர்த்துவைக்கவும் கோரிக்கை வைக்க வந்தோம். ஆனால், நாங்கள் வழிபாடு செய்யவிடாமல் தடுத்து, மோடி சிலைைய எடுத்துவிட்டார்கள். இதுபோன்ற சிலை வைக்கும் செயல்கள் அறிவார்ந்த நிலை திவாலாகிவிட்டதையே காட்டுகிறது” எனத் தெரிவித்தார்.
சிவசேனா கட்சியினர் கூறுகையில், “நாட்டில் விலைவாசி உயர்ந்துவிட்டது. ஏழைகள் வாழவே சிரமப்படுகிறார்கள். அவர்களின் குறைகளைத் தீர்த்துவைக்கக் கோரி பிரார்த்தனை செய்ய வந்தோம். ஆனால், சிலை அகற்றப்பட்டுவிட்டது” எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT