Published : 18 Aug 2021 11:27 AM
Last Updated : 18 Aug 2021 11:27 AM

இந்திய சுதந்திரப் போராட்டத்துடன் தலிபான்களை ஒப்பிட்டு பேச்சு; சமாஜ்வாதி எம்.பி. மீது தேசத்துரோக வழக்குப்பதிவு

லக்னோ

இந்தியா சுதந்திரம் பெறுவதற்காக ஆங்கிலேயர்களை எதிர்த்ததை போல அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை எதிர்த்து தலிபான்கள் போராடி வென்றுள்ளனர் என்று பேசிய சமாஜ்வாதி கட்சி எம்.பி.ஷபிக்குர் ரஹ்மான் பராக் மீது தேசத்துரோக பிரிவின் கீழ் உ.பி. போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூலையும் கைப்பற்றியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ஆப்கனில் நடந்த ஆயுதப் போரில் தலிபான்கள் வென்றுள்ளதாக ஆப்கன் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிபர் அஷ்ரப் கானி ஆப்கன் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்காவுக்கான தூதரக அதிகாரிகளும் வெளியேறியுள்ளனர். பல நாடுகளைச் சேர்ந்த தூதரக அதிகாரிகளும் சிக்கி்க் கொண்டனர். அவர்களை மீட்டு வர ஒவ்வொரு நாடும் விமானத்தை அனுப்பி வருகிறது.

இந்தநிலையில் சமாஜ்வாதி கட்சி எம்.பி.ஷபிக்குர் ரஹ்மான் பராக் தலிபான்களை ஆதரித்து கருத்து தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘ஆங்கிலேயர்களுக்கு எதிராக இந்தியா போராடி சுதந்திரம் பெற்றது. தலிபான்கள் தங்கள் நாடு சுதந்திரமடையவும், அந்நியர்களின் பிடியில் இருந்து விடுபடவும் போராடி வருகின்றனர். இப்போது வென்றுள்ளனர். தங்கள் நாட்டை தாங்களே வழி நடத்த விரும்புகின்றனர். இதில் என்ன தவறு இருக்க முடியும்’’ எனக் கூறினார்.

இதனையடுத்து சமாஜ்வாதி கட்சி எம்.பி.ஷபிக்குர் ரஹ்மான் பராக் மீது உ.பி. போலீஸார் தேசத்துரோக பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து சம்பல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கூறியதாவது:

சமாஜ்வாதி கட்சி எம்.பி.ஷபிக்குர் ரஹ்மான் பராக் பேசிய பேச்சு சமூகவலை தளங்களில் பரவி வருகிறது. இந்திய சுதந்திரப் போராட்டத்தை தலிபான்களுடன் ஒப்பிட்டு பேசியது தேசத்துரோகமே. இதுபோன்று பேசிய வேறு சிலர் மீதும் தேசத்துரோக வழக்குப்பதிவு செய்துள்ளோம். அதுபோலவே பராக் மீதும் தேசத்துரோக பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளோம்’’ எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x