Published : 17 Aug 2021 09:09 AM
Last Updated : 17 Aug 2021 09:09 AM
கோவிட்-19 எதிர்வினை குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் ஆகியோருடன் மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆய்வு செய்தார்.
கேரளாவில் சில நாட்களாக கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனையடுத்து அங்கு மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. கேரளாவில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் அங்கிருந்து மக்கள் அண்டை மாநிலங்களான தமிழகம் மற்றும் கர்நாடகாவுக்கு செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கேரளாவில் கரோனாவை கட்டுப்படுத்த மத்திய குழு அங்கு சென்று ஆய்வு நடத்தியது. கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என கேரள அரசுக்கு மத்திய குழு பரிந்துரைத்துள்ளது.
ஓணம் பண்டிகைக்காக கடைகளை திறக்க அனுமதி வழங்கினாலும் பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி, பொது இடங்களுக்கு செல்பவர்கள் குறைந்த பட்சம் இரண்டு வாரத்துக்கு முன், முதல் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை கையில் வைத்திருக்க வேண்டும் அல்லது72 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட கரோனா பரிசோதனை செய்து இல்லை என்பதை உறுதிபடுத்தியதற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். கடைகள், மார்க்கெட், வங்கி, திறந்தவெளி சுற்றுலா மையம், வியாபார நிறுவனங்களுக்கு செல்பவர்கள் அனைவருக்கும் இந்த உத்தரவு பொருந்தும்.
கேரளாவில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அங்கு 2 டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் கோவிட்-19 பொது சுகாதார எதிர்வினை குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அம்மாநிலத்தின் சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் ஆகியோருடன் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆய்வு மேற்கொண்டார்.
மத்திய சுகாதார செயலாளர் மற்றும் கேரள சுகாதாரத் துறையின் மூத்த அதிகாரிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். கூட்டத்தில் விவாதிக்கப்பட்டவை குறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் மன்சுக் மாண்டவியா பதிவிட்டுள்ளார்.
கோவிட் அவசரகால எதிர்வினை தொகுப்பு-II-ன் கீழ் ரூ 267.35 கோடியை கேரளாவுக்கு ஒதுக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதன் மூலம் கொரோனாவை சிறப்பாக கட்டுப்படுத்துவதற்காக மாநிலத்தின் சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்த முடியும்.
இது தவிர, மருந்துகள் தொகுப்பை உருவாக்குவதற்காக மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா ரூபாய் ஒரு கோடி வழங்கப்படும்.
கேரளாவின் அனைத்து மாவட்டங்களிலும் தொலை மருத்துவ வசதிகளுக்கு ஆதரவளிக்கக் கூடிய உயர் சிறப்பு மையத்தை மத்திய அரசின் ஆதரவுடன் நிறுவுவது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT