Published : 17 Aug 2021 03:14 AM
Last Updated : 17 Aug 2021 03:14 AM
டெல்லியில் நடைபெறும் போராட்டத்தில் தமிழகத்தின் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கத்தினரும் கலந்துகொண்டனர். இப்பிரச்சினையில் சர்வதேச நாடுகள் தலையிட வேண்டி நேற்று அவர்கள் டெல்லி ஐக்கிய நாடுகள் சபை அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்தினர்.
மத்திய அரசின் முக்கிய மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக பல்வேறு மாநிலங்களிலிருந்து விவசாய சங்கத்தினர் வந்து கலந்து கொண்டு ஆதரவளித்து வருகின்றனர். இந்தவகையில், கடந்த வாரம், தமிழகத்திலிருந்து காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கத்தினர் டெல்லி வந்திருந்தனர்.
கே.வீ.இளங்கீரன் தலைமை யில் வந்தவர்களை டெல்லி ரயில்நிலையத்திலேயே காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அனைவரையும் வாகனத்தில் ஏற்றி டெல்லியின் எல்லையில் விவசாயிகளின் போராட்டக் களமாகி விட்ட சிங்கூரில் இறக்கி விட்டனர். இங்கிருந்தபடி போராடிய தமிழக விவசாயிகள் நேற்று திடீர் என டெல்லியின் லோதி எஸ்டேட் பகுதிக்கு வந்தனர். அங்குள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தகவல் மையத்திற்கு முன்பாக கூடிநின்று கோஷமிட்டபடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவரான கே.வீ.இளங்கீரன் கூறும்போது, ‘டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல், மத்தியில் ஆளும் பாஜக அரசு நடந்து கொள்வது இந்திய விவசாயிகளை வேதனை அடையச் செய்துள்ளது. எனவே, விவசாயிகள் போராட்டத்தை உலக நாடுகள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறோம். உலக நாடுகளின் அமைப்பான ஐக்கிய நாடுகள் சபை இப்பிரச்சினையில் தலையிட்டு இந்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும். இதற்காக இன்று ஐக்கிய நாடுகள் சபையின் தகவல் மையம் (United Nations Information Center) முன்பாக போராட்டம் நடத்தினோம்’ எனத் தெரிவித்தார்.
சுமார் 2 மணி நேர ஆர்ப்பாட்டத்திற்கு பின் தமிழக விவசாயிகளை டெல்லி காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். அனுமதி இன்றி போராட்டம் நடத்த முடியாது என எச்சரித்த அவர்கள் அனைவரையும் வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். பிறகு டெல்லி ரயில் நிலையத்தில் இறக்கி விட்டு தமிழகம் திரும்பிச் செல்லுமாறு கூறினர். எனினும், அங்கிருந்து மீண்டும் சிங்கூரின் எல்லையில் நடைபெறும் போராட்டத்தில் தமிழக விவசாயிகள் சென்று கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT