Published : 15 Aug 2021 12:29 PM
Last Updated : 15 Aug 2021 12:29 PM
நாடுமுழுவதும் உள்ள சைனிக் பள்ளிக்கூடங்களில் பெண் குழந்தைகளும் இனிமேல் கல்வி பயில அனுமதிக்கப்படுவார்கள் என்று சுதந்திரதின விழாவில் பிரதமர் மோடி தெரிவி்த்தார்.
நாட்டின் 75-வது சுதந்திரதினவிழா உற்சாகமாக நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்த பிரதமர் மோடி மக்களுக்கு வாழ்த்துகளைக் கூறி உரைாயற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
மத்திய அரசு அறிமுகப்படுத்திய புதிய கல்விக் கொள்கையில் பிராந்திய மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, மாணவர்கள் தங்கள் தாய்மொழியில் பாடங்களை கற்க வகை செய்யப்பட்டுள்ளது.
புதிய கல்விக் கொள்கை என்றால், ஏழ்மை, வறுமையை எதிர்த்து போராடுவது என நான் கருதுகிறேன். 21ம் நூற்றாண்டின் தேவைகளை எதிர்கொள்ளத்தான் இந்த தேசம் இன்று புதிய கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது.
தாய்மொழியில் கல்வி கற்பதன் மூலம் ஏழைக் குடும்பத்தில் உள்ள மகள்களும், மகன்களும் தொழில்சார்ந்த நிபுணர்களாக மாற முடியும், அவர்களின் திறமைக்கு ஏற்ப நீதி வழங்கப்படும்.
விளையாட்டு என்பது திறனைவளர்க்கும் பாடமாக இல்லாமல், புதியக் கல்விக்கொள்கையில் முக்கியப் பாடங்களின் ஒருபகுதியாக இணைக்கப்பட்டுள்ளது. வாழ்க்கையில் தொடர்ந்து முன்னேறிச் செல்ல விளையாட்டு முக்கியமான கருவியாகும்.
நாடுமுழுவதும் உள்ள சைனிக் பள்ளிக் கூடங்களில் பெண் குழந்தைகளையும் சேர்த்து கல்வி அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சைனிக் பள்ளிகளில் தாங்களும் சேர்ந்து படிக்க ஆவலாக இருப்பதாக ஏராளமான பெண் குழந்தைகளிடம் இருந்து வேண்டுகோள்கள் வந்ததால் இந்த முடிவை அரசு எடுத்துள்ளது.
எனக்கு லட்சக்கணக்கான மகளிடம் இருந்து கடிதம் வந்ததில், ஏராளமானோர் சைனிக் பள்ளிக்கூடங்களில் படிக்க விருப்பம் தெரிவி்த்திருந்தனர். ஆதலால் இனிமேல், பெண் குழந்தைகளுக்கும் சைனிக் பள்ளி அனுமதிக்கப்படும். மிசோரத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன், சைனிக் பள்ளியில் பெண் குழந்தைகளை அனுமதிப்பது குறித்து பரிசோதனை முயற்சி நடந்தது.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT