Published : 15 Aug 2021 11:53 AM
Last Updated : 15 Aug 2021 11:53 AM
புதிய மத்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியாவிற்காக முன்னாள் மத்தியக் கல்வித்துறை அமைச்சரான ரமேஷ் நிஷாங் பொக்ரியாலின் அரசு குடியிருப்பை காலி செய்ய வற்புறுத்துவதாகப் புகார் கிளம்பியது.
இதன் மீது மத்திய அரசு வெளியிட்ட விளக்கத்தால் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. காங்கிரஸிலிருந்து பாஜகவில் இணைந்த ஜோதிர் ஆதித்ய சிந்தியா மத்திய அமைச்சரவையில் புதிய உறுப்பினராகி உள்ளார்.
விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சரான அவருக்கு இன்னும் அரசு குடியிருப்பு அளிக்கப்படவில்லை. அவரது டெல்லியின் அனந்த லோக் பகுதியிலுள்ள சொந்த குடியிருப்பில் வசிக்கிறார்.
இதற்கு அவர் டெல்லியில் குறிப்பிட்ட அரசு குடியிருப்பை விரும்புவது காரணம் எனக் கருதப்பட்டது. அதிக வசதிகள் கொண்ட ஏழாம் வகையான குடியிருப்புகள் மத்திய கேபினட் அமைச்சர்களுக்கு மட்டும் தற்போது ஒதுக்கப்பட்டுள்ளன.
மொத்தம் எட்டு கொண்ட இந்தவகையில் ஒன்று சப்தர்ஜங் சாலை எண் 27 இல் அமைந்துள்ளது. அமைச்சர் சிந்தியா விரும்பும் இக் குடியிருப்பில் மத்திய அமைச்சரவையிலிருந்து விலக்கப்பட்ட ரமேஷ் நிஷாங் பொக்ரியால் வசிக்கிறார்.
ஒரு மாதம் ஆன பின்பும் அவர் விதிகளின்படி இன்னும் காலி செய்யாமல் இருப்பதாகவும் புகார் எழுந்தது. இதற்காக, முன்னாள் கல்வித்துறை அமைச்சரான பொக்ரியாலை காலிசெய்ய வற்புறுத்தப்படுவதாகவும் சர்ச்சை எழுந்தது.
இதன் பின்னணியில் அந்த பங்களாவில் சிந்தியாவின் குடும்பத்தினர் பல வருடங்களாக வசித்தது காரணம் எனவும் கூறப்பட்டது. ஜோதிர்ஆதித்யாவின் தந்தையான மாதவராவ் சிந்தியா காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சராக இருந்த போது எண் 27, சப்தர்ஜங் குடியிருப்பில் 1980 முதல் வசித்தார்.
அவருக்கு பின் அக்குடியிருப்பில் அமைச்சராகி விட்ட மகன் ஜோதிர் ஆதித்ய சிந்தியா வசித்தார். எனவே, அதே குடியிருப்பில் ஜோதிர்ஆதித்ய மீண்டும் வசிக்க விரும்புவதாகக் கூறப்பட்டது.
இந்த சர்ச்சைக்கு முடிவுகட்டும் வகையில் மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறையின் சார்பில் நேற்று ஒரு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், எண் 27, சப்தர்ஜங் சாலையிலுள்ள வகை பங்களா, கேபினட் அமைச்சர்களுக்கு மட்டும் ஒதுக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதிலும் அவை மாநிலங்களை எம்.பிக்களுக்கு அன்றி, முன்னாள் முதல்வர் மற்றும் ஆளுநர், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் மக்களவையின் முன்னாள் சபாநாயகர்களுக்கு மட்டும் ஒதுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது உத்தராகண்டின் முன்னாள் முதல்வரான பொக்ரியால், ஹரித்துவாரின் மக்களவை தொகுதி எம்.பியாகவும் இருப்பதால் அக்குடியிருப்பில் அவர் தொடர்வதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், முன்னாள் மற்றும் தற்போதைய அமைச்சர்களுக்கு இடையிலான சர்ச்சை முடிவிற்கு வந்திருப்பதாகக் கருதப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT