Published : 15 Aug 2021 03:24 AM
Last Updated : 15 Aug 2021 03:24 AM
கரோனா 3-வது அலையை எதிர்கொள்ள மாநிலங்களுக்கு மத்தியஅரசு ரூ.14,745 கோடி வழங்கியுள்ளது.
இந்தியாவில் கடந்த ஆண்டு செப்டம்பரில் கரோனா முதல் அலை உச்சத்தில் இருந்தது. அப்போது தினசரி வைரஸ் தொற்று ஒரு லட்சத்தை நெருங்கியது. இதன்பின் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கரோனா 2-வது அலை உச்சத்தை எட்டியது. அப்போது நாள்தோறும் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று ஏற்பட்டது.
அடுத்ததாக கரோனா 3-வது அலை உருவாகும். ஆனால் எப்போது என்பதை துல்லியமாக கணிக்க முடியாது என்று பெரும்பாலான சுகாதாரத் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இரண்டாம் அலையின்போது ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு கணிசமாக அதிகரித்தது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண அனைத்து மாவட்டங்களிலும் பி.எம்.கேர்ஸ் நிதியில் இருந்து ஆக்சிஜன் ஆலைஅமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும்3-வது அலையை எதிர்கொள்ளமத்திய அரசு இப்போதே பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை கூறியிருப்பதாவது:
கரோனா 3-வது அலையை எதிர்கொள்ள நாடு முழுவதும் மருத்துவ உள்கட்டமைப்புகளை வலுப்படுத்த ரூ.23,123 கோடி சிறப்பு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்துக்கு மத்திய அரசு 60 சதவீதமும் மாநில அரசுகள் 40 சதவீதமும் நிதி வழங்குகின்றன. வடகிழக்கு மாநிலங்களை பொறுத்தவரை மத்திய அரசு 90 சதவீதமும் மாநில அரசுகள் 10 சதவீத நிதியும் அளிக்கின்றன. மத்திய அரசின் பங்களிப்பு தொகை மாநிலங்களுக்கு அவ்வப்போது வழங்கப்பட்டு வருகிறது.
இதன்படி, முதல்கட்டமாக மத்திய அரசு சார்பில் கடந்த மாதம் 22-ம் தேதி மாநிலங்களுக்கு ரூ.1,817 கோடி வழங்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக மத்திய அரசு சார்பில் நேற்று முன்தினம் மாநிலங்களுக்கு ரூ.14,744.99 கோடி அளிக்கப்பட்டது.
அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் திட்டப் பணிகளை நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இதன்படி நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் புதிதாக 20,000 அவசர சிகிச்சை படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. இதில் 20 சதவீதம் குழந்தைகளுக்காக ஒதுக்கப்படும். மேலும் ஆக்சிஜனை சேமித்து வைக்க 1,050 கிடங்குகளை அமைப்பது, புதிதாக8,800 ஆம்புலன்ஸ்கள் வாங்குவது, மருத்துவ பணியாளர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.
நாடு முழுவதும் 621 மாவட்ட மருத்துவமனைகள், 933 பொது சுகாதார மையங்களில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இணையான மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. 733 மாவட்டங்களில் தொலை மருத்துவ வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. ஆர்டிபிசிஆர் ஆய்வகம் இல்லாத மாவட்டங்களில் புதிய ஆய்வகம் அமைக்கப்படும்.
இவ்வாறு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT