Published : 14 Aug 2021 03:23 PM
Last Updated : 14 Aug 2021 03:23 PM
பாகிஸ்தான் சுதந்திர தினத்தையொட்டி பஞ்சாப் அமிர்த்சர் அருகே இருக்கும் அடாரி-வாஹா எல்லையில் இந்திய, பாகிஸ்தான் எல்லைப் பாதுகாப்புப் படையினர் இனிப்புகளை வழங்கி பரஸ்பரம் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டனர்.
பாகிஸ்தான் சுதந்திர தினம் ஆகஸ்ட் 14-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் 75-வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. எல்லைப் பாதுகாப்புப் பணியில் இரு நாட்டு வீரர்களும் சுதந்திரத் தினத்தன்று இருதரப்புக்கும் இனிப்புகளை வழங்கி வாழ்த்துக்களைக் கூறுவதை மரபாக வைத்துள்ளனர்.
சில தவிர்க்க முடியாதஅரசியல் சூழல், போர்சூழல், தீவிரவாதிகள் பிரச்சினையின்போது மட்டும் இரு நாட்டு படைகளும் இனிப்புகளை பகிரவில்லை.
அந்த வகையில் அடாரி,வாஹாவில் உள்ள எல்லையில் பாகிஸ்தான் எல்லைப் பாதுகாப்புப் படையினர் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கு இனிப்புகளை வழங்கினர். பதிலுக்கு இந்திய பாதுகாப்புப் படையினரும் வாழ்தத்துக்களைத் தெரிவித்தனர்.
இதுகுறித்து பிஎஸ்எப் கமாண்டன்ட் ஜஸ்பிர் சிங் கூறுகையில் “ நீண்கால பாரம்பரியத்தின்படி, இரு நாட்டு எல்லைப்பாதுகாப்பு படையினரும் சில சிறப்பு நிகழ்வுகளின் போது இனிப்புகளை வழங்கி வாழ்த்துகளைத் தெரிவிப்போம். இந்த பாரம்பரிய பழக்கம் எல்லையில் அமைதி, வளர்ச்சியை ஏற்படுத்தும். பாகிஸ்தான் எல்லைப் பாதுகாப்புப் படையினர் இன்று எங்களுக்கு இனிப்புகளை வழங்கினர், நாங்களும் பதிலுக்கு நாளை இனிப்புகள் வழங்குவோம்”எனத் தெரிவித்தார்.
பாகிஸ்தான் இன்று தனது 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடி வருகிறது. இரு நாடுகளுக்கு இடையே அரசியல்ரீதியான உறவுகள் உரசல் மிகுந்ததாக இருந்தாலும் இதுபோன்ற பழங்கங்கள் தொடர்கின்றன. ஆப்கானிஸ்தான் சூழல், எல்லையில் அத்துமீறலால் இரு தரப்பு நாடுகள் உறவுகளும் சுமூகமாக இல்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT