Published : 14 Aug 2021 01:22 PM
Last Updated : 14 Aug 2021 01:22 PM
கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் பாலின இடைவெளியை போக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மாநில தலைமை செயலாளர்களை தேசிய பெண்கள் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
கரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளும் பெண்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது என ஊடகங்களில் செய்தி வெளியானது. இதையடுத்து அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலாளர்களுக்கு தேசிய பெண்கள் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. அதில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் பாலின இடைவெளியை போக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும், தடுப்பூசி நடவடிக்கையில் பெண்கள் விடுபடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தடுப்பூசி செலுத்துவதில் இரு பாலினர் இடையே நிலவும் இடைவெளி மிகுந்த கவலையளிப்பதாக, தனது கடிதத்தில் தேசிய பெண்கள் ஆணைய தலைவி ரேகா சர்மா தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி செலுத்தும் மையங்களுக்கு பெண்கள் அதிகளவில் வர உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும், தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் இரு பாலினர் இடையே நிலவும் இடைவெளி சரிசெய்யப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
பல வீடுகளில், ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்களின் ஆரோக்கியத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதில்லை எனவும், வீட்டுக்கு வெளியே வேலை பார்க்க செல்லவில்லை என்றால் அவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள குறைந்த முன்னுரிமை அளிக்கப்படுகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெண்கள் முக்கிய கவனிப்பாளர்களாக உள்ளதால், குடும்பத்தில் உள்ள உடல்நலம் பாதிக்கப்பட்ட நபரை கவனிக்கும்போது, அவர்களுக்கும் தொற்று ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது என்றும் தடுப்பூசியின் பக்க விளைவுகள் குறித்த தவறான தகவல்கள் மற்றும் வதந்திகளை போக்க, வழக்கமான பிரச்சாரத்துடன் தீவிர தடுப்பூசி திட்ட நடவடிக்கைகளை நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் மத்திய அரசு நடத்தி வருகிறது என்று கூறியுள்ளார்.
நாட்டின் தொலைதூர பகுதிகளுக்கும் சரியான தகவல் சென்றடைவதை உறுதி செய்ய, பிரச்சாரங்களை மாநில அரசுகள் தொடர வேண்டும் என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT