Published : 12 Aug 2021 08:25 PM
Last Updated : 12 Aug 2021 08:25 PM

மசோதாக்களை நிறைவேற்றவிடாமல் மிரட்டினர்: எதிர்க்கட்சிகள் மீது பாஜக அமைச்சர்கள் 8 பேர் சரமாரி குற்றச்சாட்டு

"தேசிய ஒற்றுமையின்மையை உருவாக்குவதற்காக எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை அவர்கள் உருவாக்கினர். நாட்டுக்கு பதில் சொல்ல அவர்கள் கடமைப்பட்டவர்கள்" என்று எதிர்க்கட்சியினரை மத்திய அமைச்சர்கள் சாடியுள்ளனர்.

டெல்லியில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் மத்திய அமைச்சர்கள் பியுஷ் கோயல், தர்மேந்திர பிரதான், முக்தார் அப்பாஸ் நக்வி, பிரகலாத் ஜோஷி, பூபேந்திர யாதவ், அனுராக் சிங் தாகூர், அர்ஜுன் ராம் மேக்வால் மற்றும் வி முரளிதரன்கலந்து கொண்டனர்.

அதில் அமைச்சர்கள் கூறியதாவது:

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் விரும்பத்தகாத செயல்கள் வழக்கமாகி விட்டன. இந்தக் கூட்டத்தொடரின் போது அவர்களின் செயல்கள் விதிவிலக்காக இல்லாமல் தொடர்ச்சியாகவே இருந்தன.

விதிமுறைகள் புத்தகத்தை கடந்த வருடம் கிழித்ததில் இருந்து, அவை இதுவரை கண்டிராத நாடாளுமன்றத்திற்கு ஒவ்வாத செயல்களில் ஈடுபடுவது வரை, எதிர்கட்சிகளின் செயல்பாடுகள் நாளுக்கு நாள் வெட்கத்துக்குரியதாக மாறி வருகின்றன.

இந்த கூட்டத்தொடரை நடத்தவிடக் கூடாது என்று எதிர்கட்சிகள் வெளிப்படையாகக் கூறின அவையின் செயல்பாடுகளை நடத்தவிடக் கூடாது என்பதே உள்நோக்கமாக இருந்தது.

விவாதங்களுக்கான வாய்ப்பை பலமுறை அரசு வழங்கியது. ஆனால், அவை காதில் விழவில்லை. அமைச்சரிடம் இருந்த காகிதங்களை பிடுங்கிய எதிர்கட்சியினர், அவற்றை கிழித்தனர். புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட அமைச்சர்களை மாண்புமிகு பிரதமர் அறிமுகப்படுத்தக்கூட விடவில்லை.

அவையின் மையத்திற்கு வந்த சில எதிர்கட்சி உறுப்பினர்கள், மேசை மீது ஏறியதோடு விதிமுறைகள் புத்தகத்தை அவைத்தலைவர் மீது வீசி எறிந்து நாடாளுமன்றத்தின் புனிதத்தை கெடுத்தனர். மேசை மீது ஏறி நின்ற உறுப்பினர், வெறும் மேசை மீது மட்டும் ஏறி நிற்கவில்லை, நாடளுமன்ற நன்னடத்தையை தனது காலில் போட்டு மிதித்தார். அவைத்தலைவர் மீது புத்தகத்தை வீசியதன் மூலம், நாடளுமன்ற நன்னடத்தையை அவைக்கு வெளியே அவர் வீசி எறிந்தார்.

இத்தகைய நடத்தை அவை இதுவரை கண்டிராதது, அவையின் நற்பெயருக்கு பெரும் அவப்பெயரை உருவாக்கியுள்ளது. அமைப்பின் நன்மதிப்புக்கு பெரும் தீங்கு விளைவித்ததோடு, தலைமை செயலாளருக்கு படுகாயம் ஏற்படுத்தும் வகையிலும் எதிர்க்கட்சிகளின் நடத்தை அமைந்தது. இந்திய நாடாளுமன்ற வரலாற்றுக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் எதிர்கட்சிகள் செயல்பட்டன.

தங்களது செயல்பாடுகளுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வருத்தம் கூட தெரிவிக்கவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது. மாறாக, வெட்கத்திற்குரிய இந்த செயல்களை வீரத்தின் அடையாளமாக அவர்கள் கருதுகின்றனர்.

பொதுநலம் சார்ந்த விஷயங்களை விவாதிக்கக் கூடாது என்பதற்காகவே இத்தகைய செயல்களில் எதிர்கட்சியினர் ஈடுபட்டனர். எதிர்க்கட்சிகளின் அவமானகரமான செயல்பாட்டுக்காக அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரப்பட்டது.

தேசிய ஒற்றுமையின்மையை உருவாக்குவதற்காக எத்ர்க்கட்சிகளின் ஒற்றுமையை அவர்கள் உருவாக்கினர். நாட்டுக்கு பதில் சொல்ல அவர்கள் கடமைப்பட்டவர்கள் ஆவார்கள்.

இவ்வாறு அமைச்சர்கள் செய்தியாளர்கள் சந்திப்பிக் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x