Published : 12 Aug 2021 08:46 AM
Last Updated : 12 Aug 2021 08:46 AM
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்தக் கட்சியில் உள்ள 5 மூத்த தலைவர்களின் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சிகுற்றம்சாட்டியுள்ளது.
டெல்லியில் 9 வயதுச் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார். சிறுமியின் குடும்பத்தினரைச் சந்தித்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்த புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டார்.
போக்சோ சட்டப்படி, பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட சிறுமியின் புகைப்படம், அந்தச் சிறுமியின் குடும்பத்தார், பெற்றோர் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதோ அல்லது நாளேடுகள், தொலைக்காட்சிகளில் வெளியிடுவதோ சட்டப்படி குற்றமாகும்.
இது தொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், ட்விட்டர் நிறுவனத்துக்குக் கடிதம் எழுதியதைத் தொடர்ந்து, ராகுல் காந்தி, தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து சிறுமியின் தாயுடன் பேசியது தொடர்பான புகைப்படத்தையும் நீக்கினார். ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கையும் முடக்கி ட்வி்ட்டர் நிறுவனம் நடவடிக்கை எடுத்தது. ராகுல் காந்தி மீது எப்ஐஆர் பதிவு செய்யக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ்கட்சியின் தலைமை செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா உள்ளிட்டமூத்த தலைவர்கள் 5 பேரின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ள அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்புத்துறையின் செயலாளர் வினித் பூனியா ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “ ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சரும், பொதுச்செயலாளருமான அஜெய் மகான், கட்சியின் மக்களவை கொறடா மாணிக்கம் தாக்கூர், அசாம் காங்கிரஸ் பொறுப்பாளர் ஜிதேந்திர சிங், மகிளா காங்கிரஸ் தலைவர் சுஷ்மிதா தேவ் ஆகியோரின் ட்விட்டர் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.
அனைத்து தவறுகளுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவும் போராடும். ட்விட்டரில் எங்களை முடக்குவதன் மூலம் போராடுவதை தடுத்துவிடலாம் என மோடி நினைக்கிறார்” எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT