Published : 12 Aug 2021 08:17 AM
Last Updated : 12 Aug 2021 08:17 AM
புவி கண்காணிப்புப் பணிகளுக்காக இஓஎஸ்-03 செயற்கைக்கோளை சுமந்து இன்று விண்ணில் ஏவப்பட்ட ஜிஎஸ்எல்வி ராக்கெட்டில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், இலக்கை எட்டமுடியாமல் தோல்வியில் முடிந்தது என இஸ்ரோ அமைப்புத் தெரிவித்துள்ளது.
புவி கண்காணிப்பு மற்றும் பேரிடர் மீட்பு பணிகளுக்காக இஓஎஸ்-03 (ஜிஐசாட்) என்ற அதிநவீன ‘ஜியோ இமேஜிங்’ செயற்கைக்கோளை இஸ்ரோ தயாரித்தது. ராக்கெட் ஏவுதலுக்கான 26மணி நேர கவுன்ட்டவுன் முடிந்த நிலையில் ஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து இன்று (ஆக.12) காலை 5.43 மணிக்கு இஓஎஸ்-03 செயற்கைக்கோளை சுமந்து கொண்டு ஜிஎஸ்எல்வி எப்-10 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
இஓஎஸ் செயற்கைக்கோள் 2,268 கிலோ எடை கொண்டது. இதன் ஆயுட்காலம் 10ஆண்டுகள். இதிலுள்ள 5 விதமான 3டி கேமராக்கள் மற்றும் தொலைநோக்கி மூலம் புவிப்பரப்பை துல்லியமாக படம் எடுக்க முடியும். தட்பவெப்பநிலை மற்றும் வானிலை நிலவரங்களை நிகழ்நேர தன்மையில் தொடர்ந்து கண்காணிக்கும்.
இதுதவிர புயல் போன்ற பேரிடர் காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள உதவும். அதனுடன் வனப்பகுதிகள், விவசாயம், நீர்நிலைகள், மேகத்திரள்கள் வெடிப்பு, இடியின் தாக்கம் ஆகியவற்றை அறிந்து கொள்ளவும் இது பயன்படும்.
இந்நிலையில் விண்ணில் செலுத்தப்பட்ட ஜிஎஸ்எல்வி எப்-10 ராக்கெட்டில் திடீரென கோளாறு ஏற்பட்டதால், புவிசுற்றுப்பாதையை வெற்றிகரமாக அடையவில்லை என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது
இது குறித்து இஸ்ரோ அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில், “ ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் விண்வெளி நிலையத்திலிருந்து ஜிஎஸ்எல்விஎப்-10 ராக்கெட் மூலம் இஓஎஸ்-03 செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட்டது.
ஜிஎஸ்எல்வி ராக்கெட்டின் முதல் இரு படிநிலைகள் சிறப்பாகவே செயல்பட்டு பிரிந்தன. ஆனால், செயற்கைக்கோளை வெற்றிகரமாக புவிசுற்றுப்பாதையில் நிலைநிறுத்தவில்லை. ராக்கெட்டின் கிரயோஜெனிக் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஜிஎஸ்எல்வி எப்10 ராக்கெட் திட்டம் முழுமை அடையவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டது.
இஸ்ரோ தலைவர் கே. சிவன் அளித்த பேட்டியில் “ ஜிஎஸ்எல்வி எப்-10 ராக்கெட்டின் கிரயோஜெனிக் எஞ்சின் பகுதியில் ஏற்பட்ட தொழில்நுட்பக்கோளாறு காரணமாக செயற்கைக்கோளை விண்ணில் நிலைநிறுத்த முடியவில்லை. என்னுடைய நண்பர்களுக்கு இதைக் கூற விரும்கிறேன்” எனத் தெரிவித்தார்.
4 பிரிவுகளாக அமைக்கப்பட்ட ஜிஎஸ்எல்வி ராக்கெட்டில் 2 பிரிவுகள் மட்டும் பிரிந்து வெற்றிகரமாக இயங்கின, ஆனால், 3-வது பிரிவு இயங்காததால் தோல்வி அடைந்துள்ளது. இந்த செயற்கைக்கோளை கடந்த ஏப்ரல் அல்லது மே மாதம் செலுத்த திட்டமிடப்பட்டது ஆனால், கரோனா தொற்று காரணமாக ஆகஸ்ட்மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT