Published : 11 Aug 2021 03:37 PM
Last Updated : 11 Aug 2021 03:37 PM
கேரளாவில் 2 டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது.
கேரளாவில் சில நாட்களாக கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனையடுத்து அங்கு மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. கேரளாவில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் அங்கிருந்து மக்கள் அண்டை மாநிலங்களான தமிழகம் மற்றும் கர்நாடகாவுக்கு செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கேரளாவில் கரோனாவை கட்டுப்படுத்த மத்திய குழு அங்கு சென்று ஆய்வு நடத்தியது. கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என கேரள அரசுக்கு மத்திய குழு பரிந்துரைத்துள்ளது.
ஓணம் பண்டிகைக்காக கடைகளை திறக்க அனுமதி வழங்கினாலும் பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி, பொது இடங்களுக்கு செல்பவர்கள் குறைந்த பட்சம் இரண்டு வாரத்துக்கு முன், முதல் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை கையில் வைத்திருக்க வேண்டும் அல்லது72 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட கரோனா பரிசோதனை செய்து இல்லை என்பதை உறுதிபடுத்தியதற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். கடைகள், மார்க்கெட், வங்கி, திறந்தவெளி சுற்றுலா மையம், வியாபார நிறுவனங்களுக்கு செல்பவர்கள் அனைவருக்கும் இந்த உத்தரவு பொருந்தும்.
கேரளாவில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அங்கு 2 டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது.
கேரளாவில் ஆய்வு செய்த மத்திய குழுவினர் அளித்த தகவலை தொடர்ந்து வைரஸ் தாக்கம் குறித்து ஆய்வு செய்ததில் பெருமளவு டெல்டா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இந்த வைரஸ் மாற்றமடைந்துள்ளதால் ஏற்கெனவே கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டபோதிலும் அவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
ஒருவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தாலும் அல்லது தடுப்பூசி போட்டுக் கொண்ட இருந்தாலும் வைரஸ் உருமாற்றம் அடைவதால் அதனை எதிர்கொள்ள நோய் எதிர்ப்பு சக்தி போதுமானதாக இல்லை. இது மிகவும் கவலையளிக்கக் கூடியது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த உருமாற்றம் அடைந்த வைரஸ் வேகமாக பரவும் தன்மை கொண்டதாக இருப்பதால் அதிகமானோர் பாதிக்கப்படுகின்றனர்.
பத்தனம்திட்டா மாவட்டத்தில் முதல் கோவிட் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் 14,974 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இரண்டாவது தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் 5,042 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுபோலவே பல்வேறு மாவட்டங்களிலும் பாதிப்பு காணப்படுகிறது. மொத்தமாக இரண்டாவது தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் 40 ஆயிரம் பேருக்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. எனினும் கேரள சுகாதார அமைச்சகம் இதுகுறித்த விவரங்களை அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT