Published : 11 Aug 2021 03:16 AM
Last Updated : 11 Aug 2021 03:16 AM

ராகுல் காந்தியின் கணக்கை தற்காலிகமாக நிறுத்தியது ஏன்?- போக்சோ சட்டத்தை சுட்டிக்காட்டிய புகாரின்படி நடவடிக்கை என ட்விட்டர் நிர்வாகம் விளக்கம்

புதுடெல்லி

ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கை தற்காலிகமாக நிறுத்தியது ஏன் என்பது குறித்து ட்விட்டர் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

கடந்த 1-ம் தேதி டெல்லி அருகே புரானி நங்கல் பகுதியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 9 வயது சிறுமி, மின்சாரம் பாய்ந்து உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இதை மறுத்துள்ள சிறுமியின் குடும்பத்தினர், சுடுகாட்டில் பணியாற்றும் ஊழியர்கள் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்துவிட்டதாக குற்றம் சாட்டி வருகின்றனர். குடும்பத்தினரின் புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயிரிழந்த சிறுமியின் தாய், தந்தையை அண்மையில் சந்தித்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, அந்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டார். சிறுமியின் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும். அதற்கு நான் துணை நிற்பேன் என்று அவர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

சிறார் சட்ட விதிகளின்படி எந்தவொரு வழக்கு விசாரணையிலும் சிறார்களின் புகைப்படம், வீடியோவை ஊடகங்களில் வெளியிடக்கூடாது. அவர்களின் அடையாளத்தை வெளிப்படுத்தக்கூடாது. இந்த விதியை மீறினால் 6 ஆண்டு சிறை, ரூ.2 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.

போக்சோ சட்ட விதிகளின்படியும் பாதிக்கப்பட்ட பெண், சிறுமி, அவர்களது குடும்பத்தினரின் புகைப்படம், வீடியோவை ஊடகங்களில் வெளியிடக்கூடாது. இந்த விதிமீறலுக்கு 6 மாதங்கள் முதல் ஓராண்டு சிறையும், அபராதமும் விதிக்கப்படும்.

சிறுமியின் தாய், தந்தையை சந்தித்த புகைப்படத்தை ராகுல் காந்திட்விட்டரில் வெளியிட்டு, சிறுமியின்அடையாளத்தை வெளிப்படுத்திவிட்டதாக தேசிய குழந்தைகள் உரிமைக்கான பாதுகாப்பு ஆணையம் (என்சிபிசிஆர்) டெல்லி போலீஸிலும், ட்விட்டர் நிர்வாகத்திடமும் புகார் அளித்தது.

இதைத் தொடர்ந்து கடந்த 7-ம் தேதி ராகுல் காந்தியின் சர்ச்சைக்குரிய ட்விட்டர் பதிவு நீக்கப்பட்டது. அவரது ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக 24 மணி நேரத்துக்கு நிறுத்தப்பட்டது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. தற்காலிக நிறுத்தம் நீக்கப்பட்ட பிறகும் ட்விட்டரில் ராகுல் இதுவரை எவ்வித பதிவையும் வெளியிடவில்லை. ட்விட்டர் நிர்வாகம் மன்னிப்பு கோர வேண்டும் என்று காங்கிரஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

மேலும் ராகுல் பதிவிட்ட புகைப்படத்தை காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு, தங்கள் கணக்குகளையும் முடக்க வேண்டும் என்று சவால் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து ட்விட்டர் நிர்வாகம்வெளியிட்டுள்ள விளக்கத்தில், “ராகுலின் கணக்கு முடக்கப்படவில்லை. விதிமீறல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ட்விட்டர் சமூக வலைதளத்தில் தனிநபர்களுக்கு தீங்கு ஏற்படாமல் பாதுகாப்பது எங்கள் கடமை. போக்சோ சட்ட விதிகளை சுட்டிக் காட்டி என்சிபிசிஆர் அளித்த புகாரில் உண்மை தன்மை இருந்ததால் ராகுலின் கணக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது” என கூறப்பட்டுள்ளது.

வேண்டுமென்றே பதிவிட்டார்

என்சிபிசிஆர் தலைவர் பிரியங்க்கணுங்கு கூறும்போது, “குழந்தைகளின் நலன்கள், உரிமைகளைப் பாதுகாப்பது எங்களது தலையாய கடமை. ராகுலின் ட்விட்டர் புகைப்படம் தொடர்பாக ‘தலித் பாசிட்டிவ் மூவ்மென்ட்' என்ற இயக்கம் எங்களிடம் புகார் அளித்தது. அதன்பேரில் டெல்லி போலீஸ், ட்விட்டர் நிர்வாகத்திடம் புகார் அளித்தோம். சர்ச்சைக்குரிய பதிவை நீக்கிய ட்விட்டர் நிர்வாகம், ராகுலின் கணக்கை நிறுத்தி வைத்தது. வேண்டுமென்றே சிறுமியின் அடையாளத்தை ராகுல் வெளிப்படுத்தியுள்ளார். இதுதொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்திலும் வழக்கு நிலுவையில் உள்ளது. சட்டத்தின் முன்பு அனைவரும் சமம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x