Published : 11 Aug 2021 03:16 AM
Last Updated : 11 Aug 2021 03:16 AM

வேட்பாளர்களின் குற்றப் பின்னணியை வெளியிடாத காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட 8 கட்சிகளுக்கு அபராதம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி

வேட்பாளர்களின் குற்றப் பின்னணியை பொது வெளியில் வெளியிடாத பாஜக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 8 கட்சிகளுக்கு உச்ச நீதி மன்றம் அபராதம் விதித்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற பிஹார் தேர்தலில் வேட்பாளர்களின் குற்றப் பின்னணி தொடர்பாக பொது வெளியில் அறிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. நேற்று இந்த வழக்கு, தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, பிஹார் தேர்தலில் வேட்பாளர்களின் குற்றப்பின்னணி விவரங்களை பொதுவெளியில் அறிவிக்காமல், உச்ச நீதிமன்ற உத்தரவை பின்பற்றாமல் நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறி பாஜக,காங்கிரஸ், இந்திய கம்யூ, ஐக்கிய ஜனதாதளம், ஆர்ஜேடி, எல்ஜேபி ஆகிய கட்சிகளுக்கு தலா ரூ.1லட்சம் அபராதமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு ரூ.5 லட்சமும் அபராதம் விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை தேர்வு செய்த 48 மணிநேரத்துக்குள், அவர்கள் மீதான குற்றவழக்குகளை தங்கள் கட்சி இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்றும் வேட்பாளர்களின் குற்றப்பின்னணியை வாக்காளர் அறியும் வகையில் செயலி ஒன்றை தேர்தல் ஆணையம் உருவாக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

முன்னதாக, குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட எம்எல்ஏ, எம்பி.க்கள் தேர்தலில்போட்டியிட தடை விதிக்கக் கோரி வழக்கறிஞர் அஸ்வின் குமார் உபாத்யாயா என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வுமுன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘‘எம்பி.க்கள், எம்எல்ஏக்கள் மீதானகிரிமினல் வழக்குகளை அந்தந்த மாநிலங்களின் உயர் நீதிமன்றங்களின் அனுமதி இல்லாமல் மாநில அரசுகள் திரும்பப் பெறக் கூடாது. மேலும், எம்பி.க்கள், எம்எல்ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதிகளை மறு உத்தரவு வரும் வரை மாற்றக்கூடாது’’ என்று தெரிவித்தனர்.

இதற்கிடையே, எம்பி., எம்எல்ஏக்கள் மீதான பண மோசடி வழக்குகள் குறித்த பட்டியல் உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் தமிழகத்தைச் சேர்ந்த எம்பி.க்கள் ஆ.ராசா, கனிமொழி, தயாநிதி மாறன், ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், முன்னாள் எம்பி டிடிவி தினகரன், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர்லாலு பிரசாத் யாதவ், பஞ்சாப் முதல்வர்அம்ரீந்தர் சிங், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உள்ளிட்ட 122 பேர் மீது பணமோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளதாக அமலாக்கத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x