Published : 10 Aug 2021 06:34 PM
Last Updated : 10 Aug 2021 06:34 PM

குழாய் மூலம் எரிவாயு விநியோகம்; சிலிண்டரை விட விலை குறைவானது: பிரதமர் மோடி

புதுடெல்லி

குழாய் மூலம் விநியோகிக்கப்படும் இயற்கை எரிவாயு, சிலிண்டரை விட விலை குறைவானது, உ.பி. உள்ளிட்ட மாநிலங்களில் இந்த சேவையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பிரதமர் மோடி கூறினார்.

உத்தரப்பிரதேசத்தின் மஹோபாவில் சமையல் எரிவாயு இணைப்புகளை வழங்கி உஜ்வாலா 2.0 திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வின் போது உஜ்வாலா திட்டத்தின் பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடினார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் கூறியதாவது:

சுதந்திரப் போராட்டத்தின் முன்னோடியான மங்கள் பாண்டேவின் சொந்த ஊரான உத்தரப் பிரதேசத்தின் பாலியாவிலிருந்து 2016ஆம் ஆண்டு இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. இன்று, உஜ்வாலா திட்டத்தின் இரண்டாம் பதிப்பும் உத்தரப் பிரதேசத்தின் மஹோபாவிலிருந்து தொடங்கப்பட்டுள்ளது.

புந்தேல்கண்ட் மண்ணின் மைந்தரான மேஜர் தியான் சந்த் அல்லது தாதா தியான் சந்த்தை நினைவு கூறும் விதமாக நாட்டின் மிக உயரிய விளையாட்டு விருது, மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது என்று தற்போது அழைக்கப்படுகிறது.

விளையாட்டுத் துறையில் ஈடுபட ஆர்வம் உள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு இது ஊக்கமளிக்கும்.

வீடு, மின்சாரம், தண்ணீர், கழிவறை, எரிவாயு, சாலைகள், மருத்துவம் மற்றும் பள்ளி போன்ற அடிப்படை தேவைகளைப் பெறுவதற்காக நாட்டு மக்கள் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. இது போன்ற ஏராளமான வசதிகள் பல ஆண்டுகளுக்கு முன்னரே வழங்கப்பட்டிருக்கலாம்.

இல்லத்திலிருக்கும் பிரச்சினைகள் முதலில் தீர்க்கப்பட்டால் தான் நமது புதல்விகள் வீடு மற்றும் சமையல் அறைகளை விட்டு வெளியேறி தேச கட்டமைப்பில் விரிவானப் பங்களிப்பை அளிப்பார்கள்.

தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் நாடு முழுவதும் கோடிக்கணக்கான கழிவறைகள் கட்டப்படுகிறது. பெரும்பாலும் பெண்களின் பெயரில் இரண்டு கோடிக்கும் அதிகமான வீடுகள் ஏழைக் குடும்பங்களுக்காக அமைக்கப்படுகிறது.

3 கோடி குடும்பங்களுக்கு மின்சார இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ரூ. 5 லட்சம் வரையிலான மருத்துவ சிகிச்சையின் மூலம் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 50 கோடி பேர் பயனடைந்து வருகின்றனர். மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தின் கீழ் கர்ப்பகாலத்தின் போது தடுப்பூசி மற்றும் ஊட்டச்சத்துக்கு வங்கிகளில் நேரடி பணப் பரிமாற்ற வசதி கிடைத்துள்ளது. கரோனா காலகட்டத்தில் பெண்களின் ஜன் தன் கணக்குகளில் ரூ. 30,000 கோடி அரசு செலுத்தியது.

ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் நமது சகோதரிகளுக்கு குழாய் மூலம் தண்ணீர் வழங்கப்படுகிறது. இது போன்ற திட்டங்கள் பெண்களின் வாழ்வில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெண்களின் சுகாதாரம், வசதி மற்றும் அதிகாரமளித்தலுக்கு பிரதமரின் உஜ்வாலா திட்டம் பெரும் முக்கியத்துவம் அளித்துள்ளது. இத்திட்டத்தின் முதல் கட்டத்தில், 8 கோடி ஏழைகள், பட்டியலினத்தவர், நலிவடைந்தோர், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியின குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டது.

இந்த இலவச எரிவாயு இணைப்பின் பலன், கரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் உணரப்பட்டது. உஜ்வாலா திட்டத்தால் சமையல் எரிவாயு உள்கட்டமைப்பு, பன்மடங்கு விரிவடைந்துள்ளது. கடந்த 6-7 ஆண்டுகளில் 11 ஆயிரத்திற்கும் அதிகமான சமையல் எரிவாயு விநியோக மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

உத்தரப் பிரதேசத்தில் கடந்த 2014 -ம் ஆண்டு, 2000 ஆக இருந்த இந்த மையங்களின் எண்ணிக்கை, தற்போது 4 ஆயிரமாக அதிகரித்துள்ளது. 2014- ஆம் ஆண்டு இருந்ததைவிட கடந்த ஏழு ஆண்டுகளில் அதிக எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டதன் வாயிலாக 100% எரிவாயு வழங்கும் இலக்கை அடையும் தூரம் வெகு தொலைவில் இல்லை.

லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு உஜ்வாலா 2.0 திட்டம் அதிகபட்ச நிவாரணத்தை அளிக்கும். தொழிலாளர்கள், முகவரி சான்றிற்காக இனி ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அலைய வேண்டியதில்லை. புலம்பெயர் தொழிலாளர்களின் நேர்மையின் மீது அரசு முழு நம்பிக்கை கொண்டிருக்கிறது.

எரிவாயு இணைப்பை பெறுவதற்காக முகவரி குறித்த சுய வாக்குமூலம் மட்டுமே அளித்தால் போதுமானது. குழாய்கள் மூலம் எரிவாயு வழங்கும் சேவையை அதிகளவில் மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

குழாய் மூலம் விநியோகிக்கப்படும் இயற்கை எரிவாயு, சிலிண்டரை விட விலை குறைவானது. உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட இந்தியாவின் கிழக்குப் பகுதிகளின் பல்வேறு மாவட்டங்களில் இந்த சேவையை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முதல் கட்டமாக உத்தரப் பிரதேசத்தில் சுமார் 50 மாவட்டங்களில் 12 லட்சம் வீடுகளுக்கு இணைப்பை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வது முதல் மேம்பட்ட வாழ்க்கை என்ற கனவை நிறைவேற்றுவதை நோக்கி தற்போது நாடு முன்னேறுகிறது. வரும் 25 ஆண்டுகளில் இந்த ஆற்றல் திறனை நாம் பன்மடங்கு அதிகரிக்க வேண்டும். திறமை வாய்ந்த இந்தியாவின் இந்த உறுதியை நாம் அனைவரும் இணைந்து நிரூபிக்க வேண்டும். சகோதரிகள் இதில் ஓர் சிறப்பான பங்களிப்பை வழங்கவிருக்கிறார்கள்

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x