Published : 10 Aug 2021 03:22 PM
Last Updated : 10 Aug 2021 03:22 PM
திருவள்ளுவர் மீது கொண்ட ஈர்ப்பால், ‘திருவள்ளுவர் ஞானமடம்’ எனும் அமைப்பை நிறுவிய சிவானந்தர் திங்கள்கிழமை இரவு காலமானார். அவருக்கு வயது 75.
திருவள்ளுவர் இயற்றிய உலகப் பொதுமறையான திருக்குறள் தமிழ் மொழி உலகுக்கு அளித்த அருங்கொடை. அது வெறும் நீதி போதனை நூல் அல்ல.
என்றென்றைக்கும் பொருந்தக்கூடிய வாழ்வியல் நெறிகளை வகுத்தளித்த நூல். அப்படிப்பட்ட திருக்குறளில் திருவள்ளுவரால் முன்னிறுத்தப்பட்ட வாழ்வியல் நெறியை மக்களிடம் பரப்பியவர் சிவானந்தர்.
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்துக்கு உட்பட்ட பிரவம் என்ற ஊரில், 1946ஆம் ஆண்டு கொச்சான் - பொலியாள் தம்பதிக்கு 12-வது மகனாகப் பிறந்தார் சிவானந்தர்.
சிறுவயதில் இருந்தே திருக்குறள் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த சிவானந்தர், திருக்குறள் வாழ்வியல் நெறிகளை மக்களிடம் எடுத்துக் கூறுவதையே தனது முழு நேரப் பணியாகச் செய்து வந்தார்.
இவரது துணைவியார் சரஸ்வதி அம்மையாரும் திருக்குறள் சிந்தனைகளை மக்களிடம் பரப்புவதில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததால், இருவரும் இணைந்து பகவான் ஆதி திருவள்ளுவர் ஞானமடம் எனும் அமைப்பை நிறுவினர். இடுக்கி, கோட்டயம், எர்ணாகுளம் ஆகிய மூன்று மாவட்டங்களிலும் மடத்தின் கிளைகளைத் தொடங்கி மக்களைத் திருக்குறள் நெறிகளால் ஒருங்கிணைத்தனர்.
உலகம் போற்றும் தமிழராகக் கொண்டாடப்படும் திருவள்ளுவரை, திருக்குறளைக் கேரளாவில் உள்ள மலையாள மொழி பேசும் மக்களிடம் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர் சிவானந்தர். கேரளத்தவர் பலர் திருக்குறள் சார்ந்த வாழ்வியல் நெறியைப் பின்பற்றக் காரணமானவர்.
கேரளத்தில் திருவள்ளுவர் வழிபாட்டு முறைகளைத் தொடங்கி வைத்த முன்னோடியாகக் கருதப்படும் சிவானந்தர், கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். எர்ணாகுளம் அமிர்தானந்தமயி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று இரவு நிகழ்ந்த சிவானந்தரின் மரணம் தமிழ்ச் சமூகத்துக்குப் பேரிழப்பு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT