Published : 10 Aug 2021 08:53 AM
Last Updated : 10 Aug 2021 08:53 AM
ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவின் சாதனையைக் குஜராத்தின் பாருச் நகரைச் சேர்ந்த ஒரு பெட்ரோல் பங்க் உரிமையாளர் வித்தியாசமாக நேற்று கொண்டாடி மகிழ்ந்தார்.
பரூச் அருகே நீத்ராங் நகரில் உள்ள எஸ்.பி. பெட்ரோல் பங்க்கின் உரிமையாளர் அயூப் பதான் என்பவர்தான் இப்படிவித்தியாசமாகக் கொண்டாடினார்.
நீரஜ் எனப் பெயருள்ள அனைவருக்கும் ரூ.501க்கு இலவசமாக பெட்ரோல் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிட்டார். இதனால், நீரஜ் பெயருள்ளவர்கள் பல்வேறு இடங்களில் இருந்து வந்து தங்கள் வாகனங்களில் பெட்ரோல் நிரப்பிச் சென்றனர்.
நீரஜ் எனப் பெயருள்ளவர்கள் பெட்ரோல் நிலையத்துக்கு வந்து தங்களின் பெயர் நீரஜ் என்பதற்கான ஆதார் கார்டு உள்ளிட்ட ஏதேனும் அடையாள அட்டையைக் காண்பித்து உறுதி செய்தபின் ரூ.501க்கு இலவசமாக பெட்ரோல் வழங்கப்பட்டது. இந்தச் சலுகை நேற்று ஒருநாள் மட்டுமே அறிவிக்கப்பட்டிருந்தது.
நீத்ராங் நகரில் உள்ள எஸ்.பி. பெட்ரோல் பங்க்கின் உரிமையாளர் அயூப் பதான் கூறுகையில் “ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கத்தை தேசத்துக்கு வென்று கொடுத்த நீரச் சோப்ராவுக்கு மரியாதை செய்ய எண்ணினேன்.
அதனால் நீரஜ் எனப் பெயர் கொண்ட அனைவருக்கும் ரூ.501க்கு பெட்ரோலை இலவசமாக தர முடிவுசெய்தேன். நீரஜ் என பெயருள்ளவர்கள் என்னிடம் அடையாள அட்டையைக் காண்பி்த்து உறுதி செய்து பெட்ர்ோல் நிரப்பிச் செல்லலாம். நீரச் சோப்ரா தங்கம் வென்றது நாட்டுக்கே பெருமைக்குரிய தருணம். இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 30 பேர் இலவசமாக பெட்ரோல் நிரப்பிச் சென்றுள்ளார்கள்” எனத் தெரிவி்த்தார்.
இந்த இலவசப் பெட்ரோல் அறிவிப்பால் பயனடைந்த ஒருவர் கூறுகையில் “ முதலில் என் உறவினர் மூலம் இந்தத் தகவலை அறிந்தபோது, ஏதேனும் வதந்தியாக இருக்கும் என்று நினைத்தேன். பின்னர், அடையாள அட்டையை எடுத்துக்கொண்டு, அந்த குறிப்பிட்ட பெட்ரோல் பங்க்கில் என்னுடைய பெயர் நீரஜ் என்பதற்கான அடையாள அட்டையைக் காண்பித்தபின், என் இரு சக்கர வாகனத்துக்கு ரூ.501க்கு பெட்ரோல் இலவசமாக வழங்கினார்கள்” எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT