Published : 10 Aug 2021 03:15 AM
Last Updated : 10 Aug 2021 03:15 AM
மும்பை புறநகர் ரயில்களில் கரோனா தடுப்பூசி போட்டவர் களுக்கு மட்டும் ஆகஸ்ட் 15 முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசு மோதலால், இதற்கு ஆதாரமான கோவிட் சான்றிதழ் டி-ஷர்ட் ட்விட்டரில் வைரலாகி வருகிறது.
கரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை மெல்ல அடங்கி வருகிறது. எனினும், மூன்றாவது அலை பரவல் மீதான அச்சம் அதேவேகத்தில் துவங்கி விட்டது. இதன் காரணமாக அனைத்து மாநிலங்களும் தமக்கு உகந்த தடுப்பு நடவடிக்கைகளில் இறங்கி உள்ளன.
அதேசமயம், பொதுமக்களின் அன்றாட நடவடிக்கைகளும் அதிகம் பாதிக்காமல் இருப்பதிலும் கவனம் செலுத்தப்படுகிறது.
இந்த வகையில், நேற்று முன்தினம் மகாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் ஆளும் சிவசேனா அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில், மும்பையின் ‘லைப் லைன்’ எனப்படும் புறநகர் ரயில்களில் பொதுமக்களுக்கு ஆகஸ்ட் 15 முதல் பயணிக்க அனுமதி வழங்கியுள்ளது. இதன் முக்கிய நிபந்தனையாக கரோனா வைரஸூக்கான இரண்டு தடுப்பூசிகளும் செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ் அவசியமாக்கப் பட்டுள்ளது.
பயணச்சீட்டுகள் பெறும் போது, தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ் காண்பிக்க மகாராஷ்டிர அரசின் சார்பில் கைப்பேசி செயலி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை முதல்வர் உத்தவ் தாக்கரே வெளியிட்டுள்ளார். இதற்கு மாற்றாக பொதுமக்களின் உடையிலும் சான்றிதழ் காண்பிப்பதற் கானப் பல்வேறு உத்திகள் நகைச்சுவைகளுடன் அறிமுகப்படுத்தப்படுகிறது. சமூக வலைதளங்களில் பரவும் இவற்றில் தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ் அச்சடிக்கப்பட்ட டி-ஷர்ட் வைரலாகி வருகிறது.
பாலிவுட் நடிகர்
பாலிவுட்டின் நகைச்சுவை நடிகரான அத்துல் கத்ரி இந்த டி-ஷர்ட்டுடன் தோன்றும் படத்தை ட்விட்டரில் பதிவேற்றம் செய்துள்ளார். இதில், கூடுதலாகப் பிரதமர் நரேந்திர மோடியின் படத்துடன் தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான சான்றிதழ் அச்சடிக்கப்பட்டுள்ளது.
பொது மக்களால் மிகவும் ரசிக்கப்படும் இந்த சான்றிதழ் டி-ஷர்ட் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது, மகாராஷ்டிரா மற்றும் மத்திய அரசுகளுக்கு இடையில் நிலவும் மோதலின் காரணமாக உருவான டி-ஷர்ட் எனக் கருதப்படுகிறது.
ஏனெனில், பாஜக தலைமை யிலான தேசிய ஜனநாயக முன்னணியில் பழம்பெரும் கூட்டணியாக இருப்பது சிவசேனா. கடந்த சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளுக்கு பின் ஆட்சி அமைப்பதில் உருவான மோதலால் கூட்டணியில் இருந்து சிவசேனா வெளியேறியது. தனது முக்கிய எதிரிகளான காங்கிரஸ் மற்றும் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸுடன் இணைந்து ஆட்சி அமைத்துள்ளது. அப்போது முதல் இரு கட்சிகள் இடையே மோதல் நிகழ்ந்து வருகிறது.
மாநில - மத்திய மோதல்
முதல் பரவலுக்கு பின் துவங்கிய புறநகர் ரயில் போக்குவரத் தானது மருத்துவ மற்றும் மாநகராட்சி பணியாளர்களுக்கு மட்டுமானதாக இருந்தது. மத்திய ரயில்வே அமைச்சகத்தால் செயல்படும் புறநகர் ரயில்களில் மகாராஷ்டிர அரசு தனது மாநகராட்சி அலுவலர்களையும் பணிக்குஅமர்த்தியது. இருவருக்கும் இடையிலான மோதலால், ரயில்வேயின் ஒத்துழைப்பு குறைந்தது காரணம் எனவும் புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT